'அவர் ஓடி வந்த வேகத்தை வாழ்நாளுக்கும் மறக்க முடியாது!' பால் வாங்கி தந்த போலீஸ்காரருக்கு குழந்தையின் தாயார் நன்றி
உத்தரபிரதேச மாநிலம் பக்ரைக் பகுதியை சேர்ந்தவர் ஷஃபியா ஹஸ்மி. கர்நாடக மாநிலத்தில் பணி புரிந்து வந்த ஷஃபியா ஹஸ்மி மே 31- ந் தேதி லக்னோவுக்கு தன் 4 மாத குழந்தையுடன் ஷார்மிக் ரயிலில் பயணம் சென்று கொண்டிருந்தார். குழந்தைக்கு வைத்திருந்த பால் புட்டி தீர்ந்து போனதால், குழந்தை அழுது கொண்டே இருந்துள்ளது. பிஸ்கட்டுகளையும் தண்ணீரையும் கொடுத்து ஷஃபியா ஹஸ்மி குழந்தையை பசியாற்றி வந்துள்ளார். கிட்டத்தட்ட 1, 000 கிலோ மீட்டர் தொலைவு கடந்து ரயில் போபால் நிலையத்தை எட்டியது. அப்போது, யாரிடம் கூறி பால் பாக்கெட்டை வாங்குவது என்று ஷஃபியா தவித்துக் கொண்டிருந்தார்.
இந்த சமயத்தில் ரயில் நிலையத்தில் பணியிலிருந்த இந்திரசிங் யாதவிடத்தில் தன் குழந்தை பசியால் அழுவதை கூறி பால் பாக்கெட் வாங்கித் தருமாறு ஷஃபியா ஹஸ்மி கேட்டுள்ளார். உதவி கேட்ட அடுத்த விநாடி பால் கடையை நோக்கி ஓடினார் இந்திரசிங். அதற்குள் , ரயில் புறப்பட்டு விட்டது. ஆனாலும், சளைத்து விடாத இந்திரசிங் மின்னல் வேகத்தில் ஓடி வந்து ஓடத் தொடங்கியிருந்த ரயிலிலிருந்த ஷஃபியா ஹஸ்மியிடம் பால் பாக்கெட்டுகளை கொடுத்து விட்டார்.
இந்திரசிங் பால் பாக்கெட்டுகளை வாங்கி கொடுத்த காட்சி ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்திரசிங்கின் மனிதாபிமானம் குறித்து ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலும் மெச்சியிருந்தார் . இந்திரசிங் வாங்கிக் கொடுத்த பால் பாக்கெட்டால் ஷஃபியா ஹஸ்மியின் குழந்தையின் பசியாறியது. குழந்தையுடன் லக்னோவுக்கு நல்லபடியாக சென்றடைந்த ஷஃபியா ஹஸ்மி, இக்கட்டான சூழலில் தனக்கு உதவிய போலீஸ்காரர் இந்திர சிங்குக்கு நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து ஷஃபியா ஹஸ்மி கூறுகையில், '' என் குழந்தையின் பசியாற்ற மின்னல் வேகத்தில் அவர் ஓடி வந்ததை என்னாவ் வாழ்நாளுக்கும் மறக்கவே முடியாது. மனிதாபிமானம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதற்கு இந்திரசிங் ஒரு உதாரணம் ' என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
Comments