அடுத்தடுத்து போராட்டங்கள்.... அதிர்ச்சியில் உறைந்த அமெரிக்கா..!
அமெரிக்காவில் பத்து நாட்களாக நடந்து வரும் தொடர் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் வகையில், போராட்டம் மற்றும் பேரணியில் ஈடுபடுபவர்களை போலீசார் கடுமையாகத் தாக்கி கைது செய்து வருகின்றனர்.
அமெரிக்காவின் மின்னசொட்டா மாகாணத்தில் கடந்த வாரம் ஜார்ஜ் ஃப்ளாயிட் என்ற கருப்பின இளைஞர் போலீசாரால் துன்புறுத்தப்பட்டு உயிரிழந்தார். இதன் எதிரொலியாக நாடு முழுவதும் பெரும் போராட்டம் வெடித்தது.
கருப்பர்களும் வாழ வேண்டும் என வலியுறுத்தியும், ஜார்ஜ் ஃப்ளாயிட் மரணத்திற்கு நீதி கேட்டும் நடந்த போராட்டங்களின் போது வன்முறைகள் வெடித்தன. வாகனங்களும், கடைகளும் தீக்கிரையாக்கப்பட்டன. கலவரத்தைக் கட்டுப்படுத்த முயன்ற 6 காவலர்கள் கொல்லப்பட்டனர்.
போராட்டங்களைக் கட்டுப்படுத்த பல்வேறு நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும், அதனையும் மீறி பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் கட்டுக்கடங்காமல் நடக்கும் போராட்டங்களைக் கட்டுப்படுத்த நியூயார்க் நகரில் பேரணியாகச் சென்றவர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டனர்.
மேலும் பேரணிகளைத் தலைமையேற்று நடத்துபவர்களை உடனுக்குடன் கண்டறியும் போலீசார் அவர்களை கைவிலங்கிட்டு சாலையில் அமரவைத்து எச்சரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மான்ஹாட்டன் நகரில் இரவில் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் கைதுசெய்யப்பட்டாலும், பகலில் ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடுவதைத் தடுக்க போலீசார் தடுக்க முடியவில்லை.
வாஷிங்டன் நகரில் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்ட பொதுமக்கள் அங்கு செல்லும் பிரதான சாலையில் கருப்பர்களும் வாழவேண்டும் என்று பொருள்படும் BLACK LIVES MATTER என பிரமாண்டமாக எழுதியுள்ளனர்.
இந்த நிலையில் ராணுவத்தினர் பயன்படுத்தும் சில ஆயுதங்களை போலீசாருக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2015ல் கருப்பின இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து போலீசாருக்கு எதிராக போராட்டம் நடந்த நிலையில் நவீன ஆயுதங்களை போலீசார் கையாள அப்போதைய அதிபர் பாரக் ஒபாமா தடைவிதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments