கடந்த 15 நாட்களில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக உயர்வு

0 1281

கடந்த 15 நாட்களில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகமாகியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் புதிய பாதிப்புகள் பத்தாயிரத்தை நெருங்கியுள்ளன.

அதிகபட்சமான பாதிப்புகள் மும்பை, டெல்லி, குஜராத், மற்றும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளன. அதிகபட்ச மரணம் அகமதாபாத்திலும் குறைந்தபட்ச மரணங்கள் சென்னையிலும் ஏற்பட்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக கொரோனா சமூகப் பரவலாகி வருகிறதா என்ற அச்சம் எழுந்துள்ளது. ஆனால் சுகாதார அமைச்சகம் இன்னும் சமூகப் பரவல் ஏற்படவில்லை என்றும், கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

அரசு மருத்துவமனைகள் நிரம்பி விட்டதாகவும் நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளுக்குத் திருப்பி விடப்படுவதாகவும் தனியார் மருத்துவமனைகள் பல லட்சம் ரூபாய் கறந்துவிடுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. ஆனால் 15 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. தினமும் ஆயிரக்கணக்கில் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் கொரோனா சிகிச்சையளிக்கும் சிறப்பு மருத்துவமனைகளை அதிகரிக்க வேண்டிய நிலையும் ஏற்படக்கூடும்.

கொரனோ பரிசோதனைகளை அதிகரித்துள்ளதாக மாநில அரசுகள் தெரிவித்துள்ள போதும் ஒருவர் பரிசோதனைக்கு சென்றால் பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

உடனடியாக மருத்துவமனையில் அனுமதி கிடைக்காத அவலமும் பல அரசு மருத்துவமனைகளில் காணப்படுகிறது என்று தன்னார்வலர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அரசு அறிவிப்புகளுக்கும் யதார்த்த நிலைகளுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருப்பதாகவும் அரசு வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments