கால்பந்து உலகின் முதல் 'பில்லியனர்' ரொனால்டோ... ரூ.7,000 கோடி சம்பாதித்தார்!
கால்பந்து உலகின் முதல் பில்லியனர் என்ற பெருமையை யுவான்டஸ் ஸ்ட்ரைக்கரும் போர்ச்சுகல் அணியின் கேப்டனுமான ரொனால்டோ பெற்றுள்ளார்.
பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ மான்செஸ்டர் யுனெடெட், ரியல்மாட்ரிட் அணிகளுக்காக விளையாடியுள்ளார். இரு ஆண்டுகளுக்கு முன் , இத்தாலியின் யுவென்டஸ் அணியில் தன்னை இணைத்துக் கொண்டார். தற்போது, கொரோனா வைரஸ் காரணமாக இத்தாலியின் சீரி ஏ கால்பந்து தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், போர்ச்சுகலில் உள்ள தன் வீட்டில் ஓய்வில் இருக்கிறார் ரொனால்டோ.
இதற்கிடையே, கடந்த ஆண்டு விளையாட்டு உலகில் அதிகம் சம்பாதித்த வீரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில், ரொனால்டோ பில்லியனர் ஆகியுள்ளார் என்று போர்ப்ஸ் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு யுவென்டஸ் அணிக்காக விளையாடிய வகையில் ரொனால்டோவுக்கு 105 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சம்பளமாக வழங்கப்பட்டது. இதன் மூலம் கால்பந்து விளையாட்டில் 1 பில்லியன் (ரூ. 7,000 கோடி) அமெரிக்க டாலர்களை சம்பாதித்த முதல் வீரர் ரொனால்டோ என்ற பெருமையை பெற்றுள்ளதாக போர்ப்ஸ் கூறியுள்ளது.
விளையாட்டு உலகில் ரொனால்டோவுக்கு முன்னதாக, கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் மற்றும் குத்துச்சண்டை வீரர் பிளாயிட் மேவெதர் ஆகியோர் மட்டுமே 1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் சம்பாதித்துள்ளனர். தன் 17 ஆண்டு கால கால்பந்து வாழ்க்கையில் 650 மில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பளமாக பெற்றதாகவும் மற்றவை விளம்பர ஒப்பந்தங்கள் மூலம் கிடைத்துள்ளதாக ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
பிரபல நைக் நிறுவனம் ரொனால்டோவை வாழ்நாளுக்கும் விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்துள்ளது. இன்ஸ்டாகிராம் வழியாக உலகிலேயே அதிகம் பணம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரரும் ரொனால்டோதான். இன்ஸ்டாகிராமில் இவரை 22.2 கோடி பேர் பின்தொடர்கின்றனர். இன்ஸ்டாகிராமில் ரொனால்டோ வெளியிடும் ஸ்பான்ஸர் பதிவு ஒன்றுக்கு ரூ. 4. 44 கோடி வருமானமாக கிடைக்கும்.
Cristiano Ronaldo ranked No. 4 on this year's #Celeb100 list, one spot above his top rival in the sport, Lionel Messi—and making him the first soccer player in history to see earnings of $1 billion (pretax) https://t.co/bgg5sQRSJT pic.twitter.com/p9ecOuRMKs
— Forbes (@Forbes) June 5, 2020
Comments