கட்டுக்குள் வருமா சென்னையில் கொரோனா..?

0 3858

சென்னையில் நெருக்கமான குடியிருப்புகள் உள்ள பகுதிகளில் ஏன் வேகமாக பரவுகிறது கொரோனா?, கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன என்பது குறித்த ஒரு செய்தி தொகுப்பு...

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் கொரோனா ஓரளவு கட்டுக்குள் இருக்க, சென்னையில் மட்டும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. இதற்கு, சென்னையின் மக்கள் தொகை தான் முதற் காரணம் என்றாலும், அதிலும் மக்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதிகளில் தான் கொத்து கொத்தாக பாதிப்பு ஏற்படுகிறது.

இது மக்கள் அடர்த்தியாக வசிக்கும் நுங்கம்பாக்கம் காமராஜபுரம் பகுதி. ஒரே நாளில் ஒரே தெருவில் 9 பேர் உட்பட இதுவரை 20 பேர் இப்பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிப்பின் எண்ணிக்கை நூறை கடந்து ஹாட் ஸ்பாட்டாக மாறியிருக்கும் பகுதிகள், முதலில் இந்த பகுதியை போல் தான் இருந்தது. ஒரு சிலர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த போது, அருகருகே வசித்தவர்கள் விழிப்புணர்வு கொள்ளவில்லை. அதன் விளைவு, நெருக்கமான குடியிருப்புகள் அதிகம் இருக்கும் ராயபுரம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட மண்டலங்களில் பாதிப்பு உச்சம் தொட்டிருக்கிறது.

நுங்கம்பாக்கத்தில் உள்ள இப்பகுதியில் ரயில்பெட்டிகளை போல் ஒன்றுடன் ஒன்று இணைந்திருக்கும் வீடுகளில் சராசரியாக 5 அல்லது 6 பேர் வசிக்கின்றனர். இங்கு முக கவசம் இல்லாமல் வெளியில் வரும் முகங்கள் தான் அதிகம்.

தெருவோரம் இடைவெளி இல்லாமல் அமர்ந்து விளையாடிக் கொண்டிருக்கும் பெண்கள், கேமராவை பார்த்ததும் ஓடிச் சென்று முக கவசத்தை மாட்டிக் கொண்டு விளையாட்டை தொடர்கின்றனர்.

இது ஒரு பக்கமிருக்க அதே பகுதியில் தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டு தனிமையில் இருக்கும் தெருவிலிருந்து கொண்டு வரப்படும் குப்பை கழிவுகள் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கின்றன. இது போன்று பகுதிகளில் இருக்கும் பொது கழிப்பிடம் தான் தொற்று வேகமாக பரவ முக்கிய காரணி என்கின்றனர் மருத்துவர்கள். எனவே பொது கழிப்பிடத்தை அடிக்கடி கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டியதும் அவசியமாகிறது.

இது குறித்து மாநகராட்சி சுகாதார அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது, நெருக்கமான குடியிருப்புகள் உள்ள பகுதிகள் தான் பெரும் சவாலாக இருப்பதாக கூறுகின்றனர்.

அந்த பகுதிகளில் அடிக்கடி கிருமி நாசினி தெளிக்கவும், வீடு வீடாக அறிகுறிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்கின்றனர். அதே வேளையில் தடுப்பு பணிகள் ஒரு பக்கம் இருந்தாலும், மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனா பரவலை தடுக்க முடியும் என்கின்றனர் களப்பணியாளர்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments