தூத்துக்குடியில் காய்கறி மார்க்கெட் ஷேர் ரூ.10 லட்சமாம்..! வரிவசூலிக்காத அதிகாரிகள் சஸ்பெண்டு

0 16523

தூத்துக்குடியில் 4 வருடங்களாக வரிசெலுத்தாமல் இயங்கி வந்த காய்கறி மார்க்கெட்டுக்கு உடந்தையாக இருந்த மாநகராட்சி அதிகாரிகள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 1000 பங்குகளைக் கொண்ட காய்கறி மார்க்கெட்டில், தற்போது ஒரு பங்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்கப்படுவது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் சினா.தானா.செல்லப்பாண்டியன் , சினா.தானா. சுந்தரபாண்டியன் உள்ளிட்ட 9 நபர்களை இயக்குனர்களாகக் கொண்ட பிரமாண்ட காய்கறி மார்க்கெட் ஒன்று பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.

1000 பங்குகளைக் கொண்டு 1960-களில் தொடங்கப்பட்ட இந்த மார்க்கெட்டில், தற்போது ஒரு பங்கின் விலை 10 லட்சம் ரூபாய்க்கு மேல் என்று கூறப்படுகின்றது. இங்குள்ள 137 கடைகளுக்கும் நாளொன்றுக்கு 70 ரூபாய்க்கு மட்டும் வாடகை என ரசீது கொடுத்து, தினமும் 500 ரூபாய் முதல் 2,500 ரூபாய் வரை மார்க்கெட் நிர்வாகம் வசூலித்து வந்ததாக கூறப்படுகின்றது.

மார்க்கெட்டை சுற்றியுள்ள மளிகைக் கடைகள் ஒவ்வொன்றுக்கும் தினமும் 2,500 ரூபாய் வரை வாடகை வசூலிக்கப்படுவதாக கூறப்படும் நிலையில், காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகளிடம் தேங்காய் மூட்டை தொடங்கி வாழைத்தார், இலைக்கட்டு, காய்கறிமூட்டை என அனைத்துக்கும் கமிஷன் என தனியாக நாள் ஒன்றுக்கு சில லட்சங்கள் வசூலித்ததாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுக்குள்ளான காய்கறி மார்க்கெட்டில் கொரோனா பரவாமல் இருக்க, தனிநபர் இடைவெளியுடன் செயல்படும் வகையில், தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய வளாகத்திற்குள் கடைகள் அனைத்தும் கொண்டு செல்லப்பட்டன.

அரசுக்குச் சொந்தமான இடத்தில் கடை விரித்த வியாபாரிகளிடமும் இந்த மார்க்கெட் நிர்வாகம் கட்டாய வசூலில் இறங்கியதால் மனம் நொந்த விவசாயிகளும் வியாபாரிகளும் மாநகராட்சி ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

மூடப்பட்ட நிலையிலும் தினமும் வியாபாரிகளிடம் பணவசூலில் ஈடுபட்ட காய்கறி மார்க்கெட் நிர்வாகம் குறித்து மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் நேரடியாக விசாரணை நடத்திய போது, கடந்த 4 வருடங்களாக மாநகராட்சிக்கு ஒரு பைசா கூட வரி செலுத்தாமல் காய்கறி மார்க்கெட் இயங்கி வந்ததாக அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

137 கடைகள் ஏற்கனவே செயல்பட்ட நிலையில், 19 கடைகள் மட்டுமே செயல்படுவதாகக் கணக்கு காண்பித்து, வருடத்திற்கு 70 ஆயிரம் ரூபாய் மட்டுமே வரி செலுத்தி இருப்பதையும் கண்டுபிடித்தனர்.

இதனை கவனித்து வரி வசூலிக்காமல் மார்க்கெட் நிர்வாகத்துக்கு உடந்தையாக செயல்பட்டதாக வருவாய் அலுவலர் பாலசுந்தரம், உதவி அலுவலர் சுமித்ரா ஆகியோர் பணிஇடை நீக்கம் செய்யப்பட்டனர். தகவல் அறிந்ததும் மார்க்கெட் மேலாளர் நியூட்டன் என்பவர், 4 வருட வரி பாக்கியை செலுத்துவதாகக் கூறி 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்துடன் மாநகராட்சிக்கு சென்றுள்ளார் .

மார்க்கெட் நிர்வாகத்தின் வரிக் கணக்கை சரிபார்த்த மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள், பல கோடி ரூபாய் அளவுக்கு வரி செலுத்த வேண்டியுள்ளதால், அவர்கள் செலுத்த வந்த சொற்பத் தொகையை பெற மறுத்து திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகின்றது.

கடைகளின் எண்ணிக்கையை அதிகரித்தால் வாடகை அதிகமாக வரும் என்ற பேராசையில் மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த 4 கழிவறைகளைக் கூட அகற்றி கடைகளாக்கி வாடகை வசூலித்ததாக குற்றம் சாட்டுகின்றனர் வியாபாரிகள்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள மார்க்கெட் பங்கு இயக்குனர்களில் ஒருவரான சினா.தானா. சுந்தரபாண்டியன், தங்கள் குடும்பத்துக்கு எதிராக அரசியல் ரீதியாக அவதூறு குற்றச்சாட்டுக்களை கூறி வருவதாகவும், தாங்கள் வரிசெலுத்த மறுக்கவில்லை என்றும் வேலைப்பளுவில் மறந்து விட்டதாகவும் தெரிவித்தார்.

முறைகேடு புகாரில் சிக்கியுள்ள தனியாருக்கு சொந்தமான இந்த காய்கறி மார்க்கெட்டை நிரந்தரமாக மூடிவிட்டு, சமூக இடைவெளியுடன் செயல்படும் வகையில் தனியாக காய்கறி மார்க்கெட் ஒன்றை அரசு இடத்தில் மாநகராட்சி நிர்வாகம் நிரந்தரமாக அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments