கடன் தள்ளி வைப்புக் காலத்துக்கு வட்டி தள்ளுபடி செய்தால் வங்கிகளுக்கு 2.01லட்சம் கோடி இழப்பு ஏற்படும் -ஆர்பிஐ
கடனைத் திருப்பிச் செலுத்துவதைத் தள்ளி வைத்துள்ள 6 மாதத்துக்கும் வட்டியைத் தள்ளுபடி செய்தால் வங்கிகளுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் நிதி நெருக்கடியை ஓரளவு தள்ளி வைக்கும் வகையில் வங்கிகள், நிதிநிறுவனங்களில் பெற்றுள்ள அனைத்து வகையான கடன்களையும், கடனுக்கான தவணைகளையும் திருப்பிச் செலுத்துவதை மார்ச் 1 முதல் ஆகஸ்டு 31ஆம் தேதி வரை தள்ளி வைப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதே நேரத்தில் இந்தக் காலத்துக்கு வட்டி கணக்கிடப்பட்டு முதலுடன் சேர்க்கப்படும் என வங்கிகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் கடன் திருப்பிச் செலுத்துவதைத் தள்ளி வைத்துள்ள காலத்துக்கு வட்டியைத் தள்ளுபடி செய்யக் கோரி கஜேந்திர சர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.
அந்த மனுவில் வட்டியைத் தள்ளுபடி செய்யாத நிலையில் இந்த அறிவிப்பே பயனற்றதாகி விடும் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் பதிலளித்த ரிசர்வ் வங்கி, கடன்களின் மீதான வட்டி தான் வங்கிகளின் முதன்மையான வருவாய் என்றும், இதைத் தள்ளுபடி செய்தால் வங்கி அமைப்புகளின் நிலைத் தன்மைக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Comments