கருவுற்றிருந்த காட்டு யானை, குரூரமான முறையில் கொல்லப்பட்ட விவகாரம் -ஒருவன் கைது..
கேரள மாநிலம் பாலக்காட்டில், கருவுற்றிருந்த காட்டு யானை, வெடிமருந்து கலந்த அன்னாசி பழத்தால், குரூரமான முறையில் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒருவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள அமைதிப் பள்ளத்தாக்கு யானைகளின் வாழ்விடமாகும். உணவு தேடி அருகில் உள்ள எஸ்டேட் பகுதிக்கு வந்த, 15 வயதான பெண் யானைக்கு, குரூர நெஞ்சம் படைத்த சிலர் வெடிமருந்துகள் கலந்த அன்னாசிப் பழத்தை உணவாகக் கொடுத்துள்ளனர்.
பசி, தாகத்தில் இருந்த அந்த கர்ப்பிணி யானை அன்னாசிப் பழத்தை ஆவலோடு விழுங்க முயன்றபோது வெடித்ததில் தாடை சேதமடைந்துள்ளது. வாயில் புண் ஏற்பட்டு எதையும் உண்ணவோ அருந்தவோ முடியாமல், அருகில் இருந்த வெள்ளியாற்றில் நின்றவாறே உயிரை விட்ட காட்டு யானையின் சோக முடிவு, சொல்லொண்ணாத் துயரத்தை ஏற்படுத்துவதாக அமைந்துவிட்டது.
நாடு முழுவதும் அதிர்வலைகளையும் கண்டனக் குரல்களையும் எழுப்பிய இந்த சம்பவம் தொடர்பாக, கேரள வனத்துறையினரும் காவல்துறையினரும் இணைந்து புலன் விசாரணை நடத்தினர். இதில், நறுமணப் பயிர்களை விளைவிக்கும் தனியார் எஸ்டேட்டை சேர்ந்த 2 பணியாளர்கள் சிக்கியுள்ளனர்.
விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை அச்சுறுத்தி விரட்டுவதற்காக, பழங்களுடன் வெடிமருந்தை கலந்து பொறி வைத்திருந்ததாக, விசாரணை அதிகாரிகளிடம் அவர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. விசாரணைக்குப் பிறகு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொருவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட நபரின் பெயர் வில்சன் என்றும், வெடிமருந்துகளை பயன்படுத்தியவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள செய்தியை உறுதிப்படுத்தியுள்ள கேரள வனத்துறை அமைச்சர் ராஜூ, மேலும் சிலர் கைது செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Comments