போலி நகை அடகு வைத்து மோசடி.. வங்கி மேலாளர் உட்பட 5 பேர் கைது..!

0 4410

திருச்சியில், வாடிக்கையாளர்கள் பெயரில் கவரிங் நகைகளை அடகு வைத்து 50 லட்ச ரூபாய் மோசடி செய்த கிளை மேலாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி திருவெறும்பூரில் உள்ள ஜனா என்ற தனியார் வங்கியில் வாடிக்கையாளர் ஒருவர் தான் அடகு வைத்த நகைக்கு வட்டி கட்ட வந்துள்ளார். நகை மதிப்பீட்டாளர் சிவந்தி லிங்கம், இன்னொரு நகைக்கடனுக்கும் வட்டி கட்டாமல் உள்ளதாக அவரிடம் கூறியுள்ளார். அதற்கு வாடிக்கையாளர் அது தன்னுடையது இல்லை என்றும், ஏற்கெனவே நகை மதிப்பீட்டாளராக இருந்த பாலசுப்பிரமணியன் தன் பெயரில் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அந்த அடமானக் கடனுக்கான நகைகளைச் சோதித்த போது அவை கவரிங் நகைகள் எனத் தெரியவந்தது. இதுகுறித்து சிவந்தி லிங்கம், கிளை மேலாளர் கெல்வின் ஜோஸ்வா ராஜிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அடகில் உள்ள அனைத்து நகைகளையும் தணிக்கை செய்ததில் 250 பவுன் மதிப்பில் போலி நகைகளை அடகு வைத்து 50 லட்ச ரூபாய் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்துக் கிளை மேலாளர் கெல்வின் ஜோஷ்வா ராஜ் திருவெறும்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கு திருச்சி மாவட்டப் பொருளாதாரக் குற்றப் பிரிவுக்குச் சென்றது.

விசாரணையில் திருவெறும்பூர் கிளையில் ஏற்கெனவே மேலாளராக இருந்த பிரவீண்குமார், நகை  மதிப்பீட்டாளராக இருந்த பாலசுப்பிரமணியன் இருவரும் கூட்டாகச் சேர்ந்து வாடிக்கையாளர் பெயரில் போலி ஆவணங்களைத் தயார் செய்து போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்தது தெரியவந்தது.

வங்கியில் பணிபுரியும் யோகராஜ், வடிவேல், ராஜேந்திரன், சிலம்பரசன் ஆகிய 4 பேரும் இதற்கு உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 6 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  பாலசுப்பிரமணியன் கடந்த மாதம் இறந்துவிட்ட நிலையில், மற்ற 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments