வழிபாட்டுத் தலங்கள்.. மத்திய அரசு வெளியிட்டுள்ள நெறிமுறைகள்..!
பல்வேறு மாநிலங்களில், வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்கள் ஆகியவை, வரும் 8ந் தேதியன்று திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்கள் ஆகியவற்றில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வருகிற 8-ந் தேதி முதல் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் உள்ள மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கையாக அங்கு பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி வழிபாட்டுத் தலங்களில் உள்ள சிலைகள், புத்தகங்களை பொதுமக்கள் யாரும் தொடக்கூடாது, அன்னதானம் வழங்குவது போன்ற சமயங்களில் தனிமனித இடைவெளி பின்பற்றப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வழிபாட்டுத் தலங்களில் ஆடியோ மற்றும் வீடியோ மூலம் கொரோனா தடுப்பு பிரச்சாரம் செய்யவும், மக்கள் வழிபாட்டு தலங்களுக்குள் செல்லும் முன் கை மற்றும் கால்களை சோப்பு மற்றும் தண்ணீரால் கழுவ வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
உணவகங்களில் தனிமனித இடைவெளியை பின்பற்றுவதுடன், காத்திருப்பு பகுதியில் வாடிக்கையாளர்களுக்கு உதவ கூடுதல் ஊழியர்கள் இருத்தல் வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மொத்தமுள்ள இருக்கைகளில் 50 சதவீதம் அளவிற்கு மட்டுமே வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படவும், எளிதில் அப்புறப்படுத்த கூடிய மெனு கர்டுகளை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உணவகங்களில், வாடிக்கையாளர்கள் கட்டாயம் அடையாள அட்டையுடன் உறுதிமொழி ஆவணத்தையும் சமர்பிக்க வேண்டும் என்றும், சமையல் அறையில் ஊழியர்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றுவதுடன், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் பயன்படுத்தும் மாஸ்க் மற்றும் கையுறைகளை அப்புறப்படுத்தப்படுவது உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று வணிக வளாகங்களுக்குள் செல்பவர்கள் முககவசம் அணிந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு தொடர்பான சுவரொட்டிகள், விளம்பரங்கள் திரையிடப்பட வேண்டும்.
ஏசி வெப்பநிலை 24 முதல் 30 டிகிரி செல்சியசிற்குள் இருக்க வேண்டும், வணிக வளாகங்களில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பிற உடல்நலக் குறைபாடு கொண்ட ஊழியர்களை வாடிக்கையாளர்களுடன் நேரடித் தொடர்பு கொள்ளும் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வணிக வளாகங்களுக்குள் பெரிய கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்துவதற்கான தடைகள் தொடர்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள், விளையாட்டு அரங்குகள் மூடப்பட்டிருக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Comments