அமெரிக்காவில் தொடரும் போராட்டம் 10 ஆயிரம் பேர் கைது

0 3066

கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு படுகொலைக்கு நீதி கேட்டு அமெரிக்காவில் 8வது நாளாக போராட்டங்கள் நீடித்து வரும் நிலையில், கொல்லப்பட்ட இளைஞர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததாக உடற்கூறு ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் மின்னசொட்டா மாநிலத்தை சேர்ந்த கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு, போலீஸ் ஒருவர் கால் முட்டியால் கழுத்தை நெரித்ததில் உயிரிழந்தார்.

அவரது மரணத்துக்கு நீதி கேட்டு பல்வேறு நகரங்களிலும் 8வது நாளாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஊரடங்கை மீறியும் பொதுமக்கள் சாலைகளில் இறங்கி நீதி கேட்டு போராடி வருகின்றனர்.

வாஷிங்டனில் பெரும்பாலும் அமைதியான முறையில் போராட்டங்கள் நடைபெற்றன.

அதே சமயம் நியூயார்க் நகரில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அப்போது காவல் அதிகாரி ஒருவரது கழுத்தில் குத்தப்பட்டார். இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசார், பலத்த காயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததனர்.

அப்போது மேலும் இரு போலீசாருக்கும் கைகளில் காயங்கள் ஏற்பட்டன.

இதனிடையே கொல்லப்படுவதற்கு முன்பு 6 வாரங்களாக ஜார்ஜ் பிளாய்டு கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஹென்னபின் கவுண்டி மருத்துவ ஆய்வாளர் வெளியிட்ட இளைஞரது உடற்கூறு ஆய்வு இறுதி அறிக்கையில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நீடித்து வரும் போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவற்றுள் கால்வாசிக்கும் மேற்பட்டோர் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், நியூயார்க், டல்லாஸ், பிலடெல்பியா ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள் வாழ்வும், கனவும் கூட முக்கியம் என்பதை உணர வேண்டும் என முன்னாள் அதிபர் பாராக் ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments