விதிகளை மீறும் கொரோனா நோயாளிகளின் நெருங்கிய மற்றும் நேரடி தொடர்புகள் இனி அரசு முகாம்களில் தனிமைப்படுத்தப்படுவர்
சென்னையில் கொரோனா நோயாளிகள் மற்றும் அவர்களது நேரடி தொடர்புகள் விதிகளை மீறி வெளியே சுற்றினால், வீடுகளில் தனிமைபடுத்தப்படுவதற்கு பதிலாக, அரசு முகாம்களில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
முதலில் பேசிய சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், சென்னையில் பாதிப்பு அதிகரித்தாலும் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதை நாம் கருத்தில்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் நோய் கட்டுப்பாட்டுப் பகுதியை சேர்ந்தவர்கள் தடையை மீறி வெளியே வந்தால், வழக்கு பதியவும் தயாராக உள்ளதாக அவர் கூறினார்.
அவரை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னையில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் விதிகளை மீறி வெளியே சுற்றினால், அரசு தனிமைப்படுத்தும் முகாம்களுக்கு மாற்றப்படுவார்கள் என எச்சரித்தார்.
அதன் பின்னர் பேசிய சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், சென்னை காவல்துறையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட போலீசாரில், இதுவரை 140 பேர் குணமடைந்தது மட்டுமின்றி பணிக்கும் திரும்பியுள்ளதாக கூறினார்.
Comments