'ஒரே டிக்கெட் ஓஹோனு வாழ்க்கை... அமீரகத்தில் லாட்டரியில் ரூ. 24 கோடி வென்ற இந்தியர்!
அமீரகத்தில் நம்ம ஊர் லாட்டரி டிக்கெட்டுகள் போல ஆன்லைன் லாட்டரி மிகவும் பிரபலம். பரிசு விழுந்தால், ஒரே நாளில் கோடீஸ்வரராகி விடலாம். இந்த நாட்டில் பணிபுரியும் இந்தியர்கள் கூட்டாக சேர்ந்து ஆன்லைனில் டிக்கெட்டுகளை வாங்குவார்கள். ஏராளமான இந்தியர்களும் கூட் டாக சேர்ந்து பரிசுகளையும் வென்றிருக்கின்றனர். ஆனால், இந்த முறை ஒரே ஒரு இந்தியருக்கும் லம்பாக ரூ. 24 . 6 கோடி ஜாக்பாட் அடித்திருக்கிறது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் அசைன் முகமது. இவர், அமீரகத்தில் அஜ்மான் நகரில், பேக்கரியில் ஊழியராக பணி புரிந்து வந்தார். இவர், நண்பர்களுடன் சேர்ந்து பல முறை லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார். அப்போதெல்லாம், அசைன் முகமதுவுக்கு பரிசு விழவில்லை. கடந்த மே 14- ந் தேதி யாருடனும் கூட்டு சேராமல் தனி ஆளாக ஆன்லைனில் 139411 என்ற எண்ணுடைய டிக்கெட்டை வாங்கியிருக்கிறார். இந்த எண்ணுக்கு ஜாக்பாட் அடித்து விட, ஒரே நாளில் அசைன் முகமது 24.6 கோடிக்கு (12 மில்லியன் திர்ஹாம், ஒரு திர்ஹாம் இந்திய மதிப்பில் 20 ரூபாய் ஆகும் ) அதிபதியாகி விட்டார்.
பரிசு விழுந்தது குறித்து அசைன் முகமது கூறுகையில், '' சம்பந்தப்பட்ட டூட்டி ஃப்ரி அலுவலகத்திலிருந்து போன் வந்தது, போனை எடுத்ததும் , 'உங்களுக்கு 12 மில்லியன் திர்ஹாம் பரிசாக விழுந்துள்ளது' என்று சொன்னார்கள். அதிர்ச்சியிலும் மகிழ்ச்சியிலும் என்னால் பேச முடியவில்லை. ஒரு வேளை. என்னுடைய நண்பர்கள் யாரும் என்னுடன் ஜாலியாக விளையாடுகிறார்களோ என்ற நினைப்பில் போன் இணைப்பையும் துண்டித்து விட்டேன். பின்னர், ஆன்லைன் இணையதளத்தில் தேடிய போது, நான் வாங்கிய எண்ணுக்கு பரிசு விழுந்தது தெரிந்து சந்தோஷத்தில் திக்குமுக்காடி போய் விட்டேன்'. இவ்வளவு பணத்தை வைத்து என்ன செய்யப் போகிறேன் என்றே தெரியவில்லை '' என்கிறார் அப்பாவியாக.
ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறியுள்ள அசைன் முகமதுவுக்கு ஆஷீபா என்ற மனைவியும் இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
Comments