காதலின் விலை வரதட்சணை.. கால்கள் ஒடிந்த கொடுமை...! ஐ.டி.பெண் ஊழியரின் பரிதாபம்

0 46048

சென்னை மதுரவாயலைச் சேர்ந்த ஐ.டி ஊழியரின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால், ஐ.டி ஊழியரை காதலித்து திருமணம் செய்த பெண் மாடியில் இருந்து குதித்து இரு கால்களையும் முறித்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மதுரவாயலை சேர்ந்தவர் ஐ.டி. ஊழியர் செந்தில் நாதன், இவர் வேலைக்காக நேர்முக தேர்வுக்கு சென்ற இடத்தில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த விக்னி நாகநந்தினி என்பவரை சந்தித்துள்ளார். அப்போது ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இருவரும் வேறு வேறு இடங்களில் வேலைபார்த்து வந்த நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்துள்ளது.

திருமணத்தின் போது 20 சவரன் நகை பேசப்பட்ட நிலையில் பெண் வீட்டார் 15 சவரன் நகை மட்டுமே வரதட்சனையாக கொடுத்ததாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் திருமணம் முடிந்த நாளில் இருந்து செந்தில் நாதனின் பெற்றோர் நாக நந்தினியை கொடுமைத் படுத்தியதாக கூறப்படுகின்றது.

ஒரு கட்டத்தில் மீதமுள்ள 5 சவரன் நகைக்காக நாக நந்தினியை அவரது காதல் கணவரும் கடுமையாக அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகின்றது. இதனால் தனக்கு யாரிடம் நியாயம் கேட்பது என்று தெரியாமல் நாக நந்தினி கடும் வேதனையடைந்தார். கணவனிடம் செல்போனில் மட்டுமே பேசும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.

சம்பவத்தன்று தனது கணவருக்கு போன் செய்து தங்கள் வீட்டில் தற்போது பணம் இல்லை என்றும், அவர்களே திருமணக் கடன்களை அடைக்க இயலாமல் தவித்து வருவதாகவும் குடும்ப சூழலை விளக்கியுள்ளார். அதற்கு வரதட்சணை கொடுக்க இயலவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்ளுமாறும், தான் நிறைய வரதட்சணையுடன் 2 வது திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.

இதனால் விரக்தி அடைந்த விக்னி நாக நந்தினி, 2 வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். கீழே விழுந்த வேகத்தில் இரு கால்களும் முறிந்ததால் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய அவரை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பாக அவரிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் காதல் கணவர் செந்தில் நாதன், அவரது தாய் மற்றும் தங்கை ஆகியோர் மீது வரதட்சனை கொடுமை, தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 3 பேரும் தலைமறைவான நிலையில் நீண்ட தேடுதலுக்கு பின்னர் கணவர் செந்தில்நாதனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மனைவியிடம் கட்டாயப்படுத்தி வரதட்சணை கேட்பதும், தெருவில் செல்வோரை மறித்து வலுக்கட்டாயமாக பிச்சை எடுப்பதும் ஒன்று என்பதை சம்பந்தப்பட்ட தன்மானமில்லா மனிதர்கள் உணராதவரை, வரதட்சணை தீயில் பெண் என்ற மெழுவர்த்தி தன்னைத் தானே உருக்கிக் கொள்வதை தடுக்க இயலாது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments