200 நோயாளிகளுக்கு.. சித்தமருத்துவத்தில் கொரோனா சிகிச்சை..! சென்னையில் தீவிரம்

0 13129

சித்த மருந்துகள் மூலமாக கொரோனாவை முற்றிலும் குணப்படுத்தும் வகையில், 200 நோயாளிகளுக்கு தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் பிரத்யேக தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. நான்கே  நாட்களில் கொரோனாவை விரட்டும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய சிகிச்சை முறை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதியின்றி நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட ஒவ்வொரு நோயாளிக்கும் குறைந்தபட்சம் 14 நாட்கள் வரை சிகிச்சை அளிக்கவேண்டி இருப்பதால், சித்த மருந்துகள் மூலம் விரைவாக நோய் எதிர்ப்பு சக்தி பெற வைக்க இயலும் என்றும் சித்த மருத்துவர்கள் அண்மையில் நிரூபித்ததையடுத்து முழுவதுமாக சித்தமருந்துகளை மட்டுமே பயன்படுத்தி கொரோனா நோயாளிகளை விரைவாக குணப்படுத்தும் முயற்சியை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

சென்னை சாலிகிராமம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை மையத்தில் 200 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு கொரோனோ நோயாளிகள் அங்கு சித்த மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

முழுக்க முழுக்க சித்த மருந்துகளை மட்டுமே கொடுத்து 4 நாட்களில் கொரோனாவை விரட்டப் போவதாக அறிவித்த சித்த மருத்துவர் வீரபாபு உள்ளிட்ட 10 பேர் கொண்ட சித்த மருத்துவர்கள் இந்த சிகிச்சையை தொடங்கியுள்ளனர். கபசுர குடிநீர், 15 வகை மூலிகைகள் கலந்த தேநீர், தினமும் காலையிலும் மாலையிலும் சூரிய ஒளியில் மூச்சுப்பயிற்சி ஆகியவற்றுடன் உடலை திடப்படுத்தும் உடற்பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.

கடந்த ஒரு மாத காலமாக அரசு மருத்துவமனைகளில் அலோபதியுடன் சித்தமருத்துவம் இணைந்த சிகிச்சையால் நல்ல பலன் கிடைத்ததால்,சித்த மருத்துவத்தை மட்டும் பிரத்யேகமாக கொண்டு சிகிச்சை அளிக்க சிறப்பு அதிகாரி ராதகிருஷ்ணன் அனுமதி அளித்துள்ளார்.

சென்னையில் 3,000 கொரோனா நோயாளிகளை கொண்ட ராயபுரம் மண்டலத்தில் தற்போது தான் வீடு வீடாக மூலிகை தேநீர் வழங்கப்பட்டு வருவதாகவும் அடுத்த வார தொடக்கத்தில் அங்கு கொரோனா பரவலின் வேகம் கட்டுப்படுத்தப்படும் என்று சித்தமருத்துவர்கள் தெரிவித்தனர்.

சென்னையை மிரட்டும் கொரோனாவை , விரைவாக விரட்ட சித்தமருத்துவம் கைக்கொடுக்கும் பட்சத்தில் தமிழரின் பாரம்பரிய சிகிச்சை முறைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகவே பார்க்கப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments