10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - நாளை முதல் ஹால்டிக்கெட் விநியோகம்
10,11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வெழுத உள்ள மாணவர்களுக்கு நாளை (4.6.20) முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படுமென அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
10ம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் 15ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. 11ம் வகுப்பு விடுபட்ட தேர்வு 16ம் தேதியும், 12ம் வகுப்பு விடுபட்ட தேர்வு 18ம் தேதியும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தட்கல் உள்பட அனைத்து தனித்தேர்வர்களும் நாளை பிற்பகல் 2 மணி முதல் www.dge.tn.gov.in
என்ற இணையதளத்திற்குச் சென்று Hall ticket என்ற வாசகத்தினை அழுத்தி தங்களது விண்ணப்ப எண், பிறந்த தேதியை பதிவு செய்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளித் தலைமையாசிரியரை தொடர்பு கொண்டு பெறலாம் அல்லது www.dge.tn.gov.in இணையதளத்திற்குச் சென்று தேர்வு எண், பிறந்த தேதியை பதிவிட்டு பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10, 11 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்படவுள்ள நிலையில், அது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், ஹால் டிக்கெட்டுகள் வாங்க வரும் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு வீடு தேடி ஹால் டிக்கெட் விநியோகிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
ஹால் டிக்கெட்டுகளில் உதவி எண்கள் அச்சிடப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா 5 உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Comments