ஸ்மார்ட் போனும் இல்லை, டி.வியும் ரிப்பேர்! ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாததால் ஏழை மாணவி தற்கொலை

0 7194

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பள்ளி , கல்லூரிகள் இயங்கவில்லை . சில பள்ளிகளில் ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கேரளாவில், ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க வசதி இல்லாத வேதனையில் 14 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலப்புரம் மாவட்டம் வாலஞ்சேரி அருகே மஞ்சேரி பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் , ஷீபா தம்பதியின் மகள் தேவிகா. இவர், அங்குள்ள அரசுப் பள்ளி ஒன்றில் 9- ம் வகுப்பு படித்து வந்தார். தேவிகா படிப்பில் கெட்டி . கொரோனா பரவல் காரணமாக தேவிகா படித்து வந்த பள்ளியில் , ஆன்லைன் வழியாக வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.

ஆனால், தேவிகாவின் பெற்றோரிடத்தில் ஸ்மார்ட் போன் இல்லை. வீட்டில் இருந்த தொலைக்காட்சியும் ரிப்பேர் ஆகியியுள்ளது. ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாத சூழலில் தேவிகா மன வருத்தத்தில் இருந்துள்ளார். 'என்னால் சரியாக படிக்க முடியவில்லையே... என்று தன் பாட்டியிடத்தில் அடிக்கடி தேவிகா புலம்பியுள்ளார். 

இந்த நிலையில், திங்கள் கிழமை தேவிகா தன் வீடு இருந்த பகுதியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உடல் கருகிய நிலையில் சடலமாக கிடந்தார். அருகில் மண்ணெண்ணெய் கேனும் கிடந்தது.மாணவியின் சடலத்தை மீட்டு போலீஸார் , பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். 

தேவிகாவின் பெற்றோர், 'எங்கள் மகள் நன்றாக படிப்பாள். தேவிகா குறித்து அவரின் பள்ளி ஆசியர்களே பெருமையாக பேசுவார்கள். தேவிகா படிப்பதற்காக பள்ளியிலிருந்து டேப்லட் தருவதாகவும் கூறியிருந்தனர். ஆனால், அதற்கு இப்படி செய்து விட்டாள்' என்று கண்ணீர் விடுகின்றனர்.

கேரளாவில் ஆன்லைனில் வகுப்புகள் 'ஃபர்ஸ்ட் பெல்' என்ற பெயரில் VICTERS சேனல் வழியாக நடத்தப்படுகிறது. ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ஆனால், ‘எல்லா மாணவர்களாலும் இது போன்ற ஆன்லைன் வகுப்புகளில்ல் பங்கெடுக்க முடியுமா என்பது குறித்து முறையாக ஆய்வு நடத்தாமல் வகுப்புகள் தொடங்கியது தவறு என்று மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர் . இது குறித்து கேரள எம்.எல்.ஏ உபைத் ஹூசைன் , 'ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க கூடிய வசதி இல்லாமல் இருக்கும் நிலையில் ஆன்லைன் வகுப்புகள் தேவையற்றது' என்று தெரிவித்துள்ளார்.

பிரேத பரிசோதனையில்  மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக  மலப்புரம் மாவட்ட எஸ்.பி அப்துல்கரீம் தெரிவித்துள்ளார். கேரள மாநில கல்வித்துறை அமைச்சர் சி. ரவீந்திரன்,  தேவிகாவின் தற்கொலை குறித்து உடனடியாக அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments