பெற்றோரின் கவனக்குறைவால் பறிபோன குழந்தையின் உயிர்..!
சென்னை கொத்தவால்சாவடியில் ஒன்றரை வயது பெண் குழந்தை குளியலறை தண்ணீர் வாளியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர் வீட்டில் இருந்த போதே கவனக்குறைவால் நிகழ்ந்த சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....
சென்னை கொத்தவால்சாவடி சின்ன தம்பி தெருவைச் சேர்ந்தவர் ஜேஸிம் சர்தார் உசேன். அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் இவருக்கு திருமணமாகி ஒன்றரை வயதில் ரிஃபானா பாத்திமா என்ற பெண் குழந்தை இருந்தது.
கடந்த 26-ந் தேதி மாலை வீட்டில் குழந்தையின் தந்தை, தாத்தா உள்ளிட்ட குடும்பத்தினர் வராந்தாவில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, குழந்தையின் தாய் சமையலறையில் இருந்துள்ளார். படுக்கை அறையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தத்தி தத்தி நடந்து கதவு திறந்திருந்த குளியறைக்குள் சென்றதை யாரும் கவனிக்கவில்லை.
குளியலறையில் தனது உயரம் கொண்ட தண்ணீர் வாளியில் ஏற முடியாமல், அருகில் இருந்த துணி துவைக்க பயன்படும் சிறிய இருக்கை ஒன்றின் மீது ஏறி, பாதியளவு தண்ணீர் இருந்த வாளியில் எட்டிப்பார்க்கும் போது, அப்படியே தலைக்குப்புற நீருக்குள் கவிழ்ந்துவிட்டது.
இதற்கிடையில்,குழந்தையை காணவில்லை என படுக்கையறையின் கட்டிலுக்கு கீழ், வீட்டின் அனைத்து பகுதிகளையும் தேடியவர்கள் தாமதமாக தான் குளியலறையை கவனித்துள்ளனர். தலை கீழாக வாளியில் கிடந்த குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
கடந்த 6 நாட்களாக சிகிச்சையில் இருந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கொத்தவால்சாவடி போலீசார் உடலை கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தற்போதைய நிலையில், நோய்வாய்பட்டோ, விபத்து என எந்த காரணத்தால் உயிரிழந்தாலும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவது போல் குழந்தையின் உடலையும் பரிசோதனை செய்துள்ளனர்.
பெற்றோர், குடும்பத்தினர் என வீட்டில் அனைவரும் இருந்தபோது கவனக்குறைவால் நடந்த இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய போலீசார், குழந்தைகள் இருக்கும் வீட்டில் பெற்றோரின் கவனக்குறைவு எந்த மாதிரியான விபரீதம் ஏற்படும் என்பதற்கு, இந்த சம்பவமே சான்று எனக்கூறி எச்சரித்துள்ளனர்.
பெற்றோரின் கவனக்குறைவால் பறிபோன குழந்தையின் உயிர்..! #Chennai https://t.co/zuWUlFohVu
— Polimer News (@polimernews) June 3, 2020
Comments