SBI ஏ.டி.எம்மில்.. ரூ78 லட்சம் அபேஸ்.. ரம்மி விளையாடி திவால்..!
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஏ.டி.எம்.மில் நிரப்ப எடுத்துச் சென்ற பணத்தை இயந்திரங்களில் நிரப்பாமல், 78 லட்சம் ரூபாய் அளவிற்கு, சிறுகச் சிறுக கையாடல் செய்து, ஆன்லைனில் ரம்மி விளையாடி பறிகொடுத்த பணம் நிரப்பும் ஊழியர்கள் 2 பேரை விழுப்புரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம். திண்டிவனம் அடுத்த தென்நெற்குணம் கிராமத்தைச் சேர்ந்த காளிங்கன், பிரசாந்த் ஆகிய இருவரும் ஏ.டி.எம். எந்திரங்களுக்கு பணம் நிரப்பக்கூடிய நிறுவனத்தில் ஊழியர்களாக புதுச்சேரியில் வேலை பார்த்து வந்தனர்.
இவர்கள் இருவருக்கும் திண்டிவனம் பகுதியில் இயங்கி வரும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிக்குரிய 4 ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் பணி ஒதுக்கப்பட்டு இருவரும் அப்பணியை செய்து வந்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் காளிங்கன் கடந்த சில மாதங்களாக பணிக்கு வராமல் இருந்துள்ளார். அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அந்நிறுவன அதிகாரிகள் திண்டிவனம் வந்து ஏ.டி.எம். எந்திரங்களின் பண இருப்பை தணிக்கை செய்தனர். இதில் பல மாதங்களாக குறிப்பிட்ட தொகையை நிரப்பாமல் மொத்தமாக 78 லட்சத்து 21 ஆயிரம் ரூபாயை அவர்கள் அபேஸ் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் காளிங்கனும், பிரசாந்தும் சேர்ந்தும் ஏ.டி.எம். எந்திரங்களில் முழு பணத்தையும் நிரப்பாமல் கொஞ்சம் கொஞ்சமாக கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரின் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி நிறுவன அதிகாரி அபிஜித் என்பவர் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர், இதில் நேற்று திண்டிவனம் பகுதியில் இருந்து வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்ற காளிங்கன், பிரசாந்த் ஆகிய இருவரையும் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில் ஏடிஎம்மில் கையாடல் செய்த 78 லட்சம் ரூபாய் பணத்தையும் ஆன்லைனில் ரம்மி விளையாடி தோற்றுவிட்டதாக கூறியுள்ளனர். விட்ட பணத்தை பிடிக்க அடுத்தடுத்த நாட்களில் பணத்தை கையாடல் செய்ததாகவும், தங்களால் பணத்தை வெல்ல இயலாமல் போய் விட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் பணத்தை எங்காவது மறைத்து வைத்துவிட்டு பொய் சொல்கிறார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்..
அதேநேரத்தில் மோசடிக்காரர்கள் மட்டுமல்ல நடுத்தரவர்க்கத்தினரும் லட்சங்களை அள்ளிவிடலாம் என்ற ஆசையில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை பறிகொடுத்து வருவதால் இதனை தடை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு...
Comments