அமெரிக்காவில் தொடரும் வன்முறை.. ராணுவத்தைக் களமிறக்கப் போவதாக டிரம்ப் எச்சரிக்கை..!
அமெரிக்காவில் நடந்து வரும் வன்முறைச் சம்பவங்களில் 6 காவல்துறை அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டதால், போராட்டத்தைக் கட்டுப்படுத்த ராணுவத்தை வரவழைக்கப் போவதாக அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் மின்னபொலிஸ் என்ற இடத்தில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாயிட் என்ற இளைஞர் காவல்துறையைச் சேர்ந்தவர்களால் அடித்துக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் வன்முறை வெடித்துள்ளது. இதனால் வாகனங்கள் தீ வைப்பு சம்பவங்களும், போலீசார் கண்ணீர் புகை மற்றும் துப்பாக்கியால் சுடுதலும் ஆங்காங்கே நடந்து வருகின்றன.
அமெரிக்காவின் டென்வர் நகரில் அரசு கட்டிடத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கானோர் மண்டியிட்டு அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஹாலிவுட் பவுல்வர்டு, பிலடெல்பியா உள்ளிட்ட இடங்களில் பேரணியாக சென்று தங்கள் கண்டனத்தை வெளிபடுத்தினர். வாஷிங்டன் நகரில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்த நிலையிலும் ஆர்பாட்டங்கள் தொடர்ந்தன.
டென்வர் நகரில் நடந்த போராட்டத்தில் சிலர் காவல்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் பேரணியில் இணைந்து கைகோர்த்து சென்றனர். இந்த நிலையில் கலிஃபோர்னியாவின் ஓக்லி மற்றும் ப்ரெண்ட்வுட் உள்ளிட்ட நகரங்களில் இனபாகுபாட்டிற்கு எதிராக நடந்த அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு பங்கேற்று போலீசார் தங்கள் ஆதரவை தெரிவித்த நிகழ்வும் அரங்கேறியது. போலீசாரின் இந்த செயலுக்கு ஆரவாரம் செய்து போராட்டக்காரர்கள் வரவேற்பளித்தனர்.
40க்கும் மேற்பட்ட நகரங்களில் தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. செயின்ட் லூயிசில் 4 காவலர்களும், லாஸ் ஏஞ்சலிஸ் மற்றும் லாஸ் வேகாசிலும் தலா ஒரு காவலர்களும் போராட்டக்காரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். போராட்டம் மற்றும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த தேவைப்பட்டால் ராணுவத்தைக் களமிறக்க தயாராக இருப்பதாக அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Comments