9 ஆண்டுகளுக்குப் பின் குறுவை நெல் பயிரிட ஏற்பாடு

0 3259

மேட்டூர் அணையில் இருந்து வரும் பன்னிரண்டாம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில், காவிரிப் பாசன மாவட்டங்களில் குறுவை நெல் பயிரிடுவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 

வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரியை நம்பித் தமிழகத்தின் தஞ்சைத் தரணி விவசாயிகள் சம்பா, தாளடி, குறுவை என ஆண்டுக்கு 3 போகங்களில் நெல் பயிரிட்டு வந்தனர்.

குறுவை நெல் பயிரிடுவதற்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். பருவமழை பொய்த்தது, கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் திறந்து விடாதது எனப் பல காரணங்களால் கடந்த 9 ஆண்டுகளாக ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை.

இந்த ஆண்டு மேட்டூர் அணையில் நூறு அடிக்கு மேல் தண்ணீர் இருப்பதால், குறுவை பயிரிடுவதற்காக வரும் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை தடையின்றிச் செல்வதற்காகப் பாசனப் பகுதிகளில் 67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கால்வாய் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், குறுவை நெல் பயிரிட ஒன்றரை லட்சம் டன் உரமும், போதிய அளவு நெல் விதைகளும் இருப்புள்ளதாகவும் வேளாண்மைத்துறை முதன்மைச் செயலாளர் ககன் தீப் சிங்பேடி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை சார்பில் 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள விவசாயிகள் ஆழ்துளைக் கிணற்று நீரைக் கொண்டு முன்கூட்டியே நாற்றங்கால் தயாரித்தல், உழுதல், வரப்பு சீரமைத்தல், சமன்செய்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒன்பது ஆண்டுகளுக்குப் பின் குறுவை நெல் பயிரிடும் பேறு கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு குறுவைப் பருவத்தில் மூன்றரை லட்சம் ஏக்கர் பரப்பில் நெல் பயிரிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், தரமான நெல்விதைகள், உரங்கள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் வேளாண்துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கும்பகோணத்தில் கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மேட்டூர் அணை திறக்கப்பட்டுக் காவிரியில் தண்ணீர் வருவதற்குள் இந்தப் பணிகள் முடிவடையும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே கும்பகோணம் பகுதி விவசாயிகள் ஆழ்துளைக் கிணற்றின் நீரைக் கொண்டு எந்திர நடவுக்காகப் பாய்நாற்றங்கால் முறையில் நாற்றுகளை வளர்த்துள்ளனர். ஒருசில பகுதிகளில் பாய்களில் வளர்க்கப்பட்ட நாற்றுகளை எடுத்து எந்திரங்களில் அடுக்கி நடவுப் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் விவசாயிகள் புழுதி அடித்தல், வரப்புகளைச் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தண்ணீர் வருமுன்னே கோடை உழவுப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

எந்திரங்களைக் கொண்டு கால்வாயைத் தூர்வாரும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

காவிரியின் கடைமடைப் பகுதியான கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில், குமராட்சி வட்டாரங்களில் ஆழ்துளைக் கிணற்றில் மின்மோட்டார்களைப் பயன்படுத்தி நீர் இறைத்து 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை பயிரிடப்படுகிறது.

நிலத்தை உழுவது, இயந்திரங்களின் உதவியுடன் பரம்படிப்பது, நாற்று விடுவது, வளர்ந்த நாற்றுகளைப் பிடுங்கி வயல்களில் நடுவது உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

உரிய காலத்தில் தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் குறுவைப் பருவத்துக்கு மட்டுமின்றிச் சம்பா பருவத்திற்கும் தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் நம்பிக்கையுடன் வேளாண்மைப் பணிகளைச் செய்து வருகின்றனர்.

மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க இருப்பது விவசாயிகளிடம் நம்பிக்கையையும், எழுச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தண்ணீர் வருமுன்னே குறுவை பயிரிடத் தொடங்கியுள்ளது அதற்குக் கண்கண்ட சான்றாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments