தீவிரப் புயலாக மாறும் நிசர்க்கா.. முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்..!
அரபிக் கடலில் உருவான நிசர்க்கா புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரப் புயலாக மாறும் என்றும், புதன் பிற்பகலில் வடக்கு மகாராஷ்டிரத்தில் கரையைக் கடக்கும் என்றும் வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அரபிக் கடலில் நிலவும் நிசர்க்கா புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரப் புயலாக மாறும் எனத் தெரிவித்துள்ளது.
புதன் பிற்பகலில் வடக்கு மகாராஷ்டிரத்தில் கரையைக் கடக்கும் என்றும், அப்போது மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் கோவாவில் பெரும்பாலான இடங்களில் மிகப் பலத்த மழை பெய்யும் என்றும், கடலோரக் கர்நாடகம், மத்திய மகாராஷ்டிரம், மராத்வாடா ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
மும்பை, பால்கர், தானே, ராய்காட் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிகக் கன மழை பெய்யும் எனக் குறிப்பிட்டுள்ளது. புயலின் தாக்கத்தால் மும்பையில் கடல் அலை வழக்கத்தைவிட ஒரு மீட்டர் முதல் ஒன்றரை மீட்டர் உயரும் என்றும், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகும் அபாயமுள்ளதாகவும் எச்சரித்துள்ளது. புயலின்போது ஓட்டு வீடுகள், தகட்டுக் கூரைகள் சேதமடையக் கூடும் என்றும், மின் கம்பங்கள், தொலைத் தொடர்புக் கம்பங்கள் சாய்ந்து விழும் என்றும் தெரிவித்துள்ளது.
மரங்களின் கிளைகள் முறிந்துவிழவும் வேருடன் சாய்ந்து விழவும் கூடும் எனவும் எச்சரித்துள்ளது. முன்னெச்சரிக்கையாகத் தேசியப் பேரிடர் மீட்புப் படையின் 15 அணிகள் மகாராஷ்டிர மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், அனைவரின் நலனுக்காக வேண்டிக் கொள்வதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
Comments