10 நிமிடத்தில் ஒரு லட்சம் புக்கிங்! 'பெவ்கியூ'-வை மொய்த்த சேட்டன்கள்!
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பல மாநிலங்களில் மதுக்கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. மதுபிரியர்கள் நிறைந்த கேரளாவிலும் கூட மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. தமிழகத்தில் 'டாஸ்மாக் ' போலவே 'பெவ்கோ ' என்ற பெயரில் அரசே மதுக்கடைகளை நடத்தி வருகிறது. இது தவிர, கள்ளு, சாராயக்கடைகளும் உள்ளன. கொரோனா காரணமாக கள்ளு, மதுக்கடைகளும் அடைக்கப்பட்டன.
கேரளாவில் தென்னங்கள்ளு, பனங்கள்ளு விற்கப்படுகிறது. கள் இறக்கும் தொழிலை நம்பி மாநிலம் முழுவதும் 4,000 பனை ஏறும் தொழிலாளர்கள் உள்ளனர். இந்த தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த 10 நாள்களுக்கு முன், கள்ளுக்கடைகள் திறக்கப்பட்டன. அதே வேளையில், ஆன்லைனில் மது விற்பனை செய்வது குறித்து கேரள அரசு ஆலோசித்து வந்தது. இதற்காக, தனி ஆஃப் ஒன்றை பெவ்கோ தயாரித்து வந்தது. இந்த ஆஃப்புக்கு 'பெவ்கியூ' என்றும் பெயர் சூட்டியது. கூகுள் பிளே ஸ்டோரில் இந்த ஆஃப்பை லட்சக்கணக்கானோர் தர இறக்கம் செய்து மது பாட்டில்களை புக் செய்ய தயாராக இருந்தனர்.
இரு நாள்களுக்கு முன், பெவ்கியூ ஆஃப் வழியாக ஆன்லைன் புக்கிங் தொடங்கும் என்று கேரள அரசு அறிவித்தது. சில டெக்னிக்கல் பிரச்னைகள் ஏற்பட்டதால், அவற்றை சரி செய்ய கேரள அரசு முயற்சி செய்து கொண்டிருந்தது. டெக்னிக்கல் பிரச்னை தீர்க்கப்பட்டு, ஜூன் 1- ந் தேதி முதல் 'பெவ்கியூ ஆஃப் செயல்பட தொடங்கியது. நேற்று மதியம் 12 மணிக்கு புக்கிங் தொடங்க, அடுத்த 10 நிமிடத்தில் ஒரு லட்சம் பேருக்கு டோக்கன் விநியோகிக்கப்பட்டது.
ஆஃப் வழியாக விநியோகிக்கப்படும் டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் குறிப்பிடப்பட்ட கடைகளுக்கு சென்று மது பிரியர்கள் தங்களுக்கு தேவையான மது பாட்டில்களை இனி வாங்கிக் கொள்ளலாம். கடந்த மார்ச் 23- ந் தேதி இந்தியாவில் லாக்டௌன் அறிவிக்கப்பட்டதிலிருந்து கேரளாவில் மதுக்கடைகளும் மூடப்பட்டன. இதனால், மது கிடைக்காமல் தவித்து வந்த கேரள மது பிரியர்கள் , இப்போது மட்டற்ற மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
10 நிமிடத்தில் ஒரு லட்சம் புக்கிங்! 'பெவ்கியூ'-வை மொய்த்த சேட்டன்கள்! #BevQ | #Kerala https://t.co/bCH7fMnl0q
— Polimer News (@polimernews) June 2, 2020
Comments