அமெரிக்காவை மிரட்டும் ஆன்டிஃபா, தடை செய்ய துடிக்கும் டிரம்ப்!

0 13671
அமெரிக்காவை மிரட்டும் ஆன்டிஃபா, தடை செய்ய துடிக்கும் டிரம்ப்!

அமெரிக்காவில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாயிட் போலீஸ் அதிகாரியால் கொல்லப்பட்டதையடுத்து , பெரும் வன்முறை வெடித்துள்ளது. வாஷிங்டன், நியூயார்க், சான்பிரான்ஸிஸ்கோ, டெட்ராயிட், லாஸ்ஏஞ்சல்ஸ், சிகாகோ உள்ளிட்ட பெரு நகரங்கள் வன்முறை களமாகியுள்ளன. வன்முறைக்கு பின்னணியில் ஆன்டிஃபா( ANTIFA)என்ற அமைப்பு உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆன்டிஃபா அமைப்பை 'தீவிரவாதக் குழு' என்று அறிவிக்கப் போவதாகவும் டிரம்ப் தன் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.  தொழிலாளர்கள், இடது சாரி சிந்தனையாளர்கள், அரசுக்கு உதிராக கருத்து கொண்டவர்கள் ஒருங்கிணைந்து இந்த அமைப்பை உருவாக்கியுள்ளனர். உலகின் பல நாடுகளிலும் இயங்கினாலும், இந்த அமைப்புக்கு  தனியாக தலைவர்கள் கிடையாது.

அமெரிக்காவை பொறுத்த வரை, சமீப காலத்தில்தான் ஆன்டிஃபா அமைப்பு குறித்து அதிகமாக  செய்திகள் அடிபடத் தொடங்கின. கலிபோர்னியா பல்கலை வளாகத்தில் பழமைவாத தலைவர் ஒருவர் நடத்திய மாநாட்டில் ஆன்டிஃபா குழுவினர் புகுந்து கலாட்டா செய்தனர். விர்ஜினியாவில் சார்லோட்டஸ்வில் நகரில் வலதுசாரிகள் நடத்திய பேரணியில் புகுந்து ஆன்டிஃபா குழு வன்முறையில் ஈடுபட்டனர்.

இதே போல,  பல நகரங்களில் பல்வேறு வன்முறை சம்பவங்களின் பின்னணியில் ஆன்டிஃபா அமைப்பினர் இருந்துள்ளனர். தற்போதைய காலக்கட்டத்தில் சோசியல் மீடியாக்கள் இவர்களை இணைக்கும் முக்கிய கருவியாக உள்ளது. கருப்பு டி- சர்ட், கருப்பு பேண்ட் அணிந்து போராடுவது இவர்களின் அடையாளம். ஒரு நகரத்தில் தங்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினால், பிற நகரங்களில் இருந்து இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்  கூட்டம் கூட்டமாக சென்று போராட்டத்தில் பங்கேற்பார்கள்.

அமெரிக்காவில் பென்சில்வேனியா, கலிபோர்னியா, டெக்ஸாஸ் மாகாணங்களில்  ஆன்டிஃபா அமைப்பின் ஆதிக்கம் அதிகம். ஆனால், ஜார்ஜ் பிளாயிடின் மரணத்துக்கு பிறகு அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும் கிட்டத்தட்ட  வன்முறை வெடித்திருக்கிறது. ஆன்டிஃபா அமைப்பு வலு குன்றிய மாகாணங்களில் கூட வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்திருப்பது, அமெரிக்க அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. இதனால், இந்த அமைப்பை தடை செய்யும் முயற்சியில் டிரம்ப் ஈடுபட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments