மராத்தியம், குஜராத் மாநிலங்களுக்கு புயல் பாதிப்பு முன்னெச்சரிக்கை
அரபிக் கடலில் உருவாகியுள்ள நிசர்க்கா புயலால் மகாராஷ்டிரம், தெற்குக் குஜராத் கடலோரத்தில் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மூழ்கவும், கட்டடங்கள் சேதமடையவும், மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழவும் கூடும் என வானிலை ஆய்வுத்துறை எச்சரித்துள்ளது.
வானிலை ஆய்வுத்துறையின் செய்திக் குறிப்பில், கிழக்கு மத்திய அரபிக் கடலில் மும்பைக்குத் தென்மேற்கே 490 கிலோமீட்டர் தொலைவிலும், குஜராத்தின் சூரத்துக்குத் தென்மேற்கே 710 கிலோமீட்டர் தொலைவிலும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ளது.
மணிக்கு 11 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வரும் இது அடுத்த 12 மணி நேரத்தில் புயலாகவும், அதற்கடுத்த 12 மணி நேரத்தில் தீவிரப் புயலாகவும் மாறும் எனத் தெரிவித்துள்ளது. நிசர்க்கா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் புதன் பிற்பகலில் தெற்குக் குஜராத், வடக்கு மகாராஷ்டிரம் இடையே கரையைக் கடக்கும் என்றும், அப்போது மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் கோவா, கொங்கணக் கடற்கரை, கடலோரக் கர்நாடகம், உட்புறக் கர்நாடகம், மத்திய மகாராஷ்டிரம் ஆகிய பகுதிகளில் மிதமானது முதல் பலத்த மழை வரை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது. புதனன்று வடக்குக் கொங்கணம், வடக்கு மத்திய மகாராஷ்டிரம், தெற்கு குஜராத், டாமன், தத்ரா நாகர்ஹவேலி ஆகியவற்றில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் மும்பை, தானே, பால்கர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களின் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மூழ்கவும், கட்டடங்களின் மேற்கூரைகள் சேதமடையவும், மின்கம்பங்கள் மரங்கள் சாய்ந்து விழவும் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனால் கடலோர மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் குடியிருப்பவர்களை அங்கிருந்த வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மகாராஷ்டிர, குஜராத் அரசுகள் கேட்டுக்கொண்டுள்ளன. மற்ற பகுதிகளில் இருப்பவர்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
இதனிடையே புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மகாராஷ்டிரத்தின் சிந்து துர்க், ரத்தினகிரி, பால்கர் மாவட்டங்களில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Comments