இளம்பெண்ணை மிரட்டி பணம் பறித்த நபர்மீது வழக்கு

0 3752
இளம்பெண்ணை மிரட்டி பணம் பறித்த நபர்மீது வழக்கு

சென்னையை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக பழகி அவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை காட்டி மிரட்டி,  3 லட்ச ரூபாய் பணம் பறித்த நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த கணவனால் கைவிடப்பட்ட இளம் பெண் ஒருவருக்கு மேட்ரிமோனி மூலமாக அஜ்மல் என்கிற நபர் அறிமுகமாகியுள்ளான். தன்னை திருமணம் செய்து கொள்வதாக அளித்த வாக்குறுதியை நம்பி அஜ்மலுடன் அந்தப்பெண் நெருக்கமாக பழகத் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், எதிர்பராத விதமாக அஜ்மலின் செல்போனில் இருந்த வாட்ஸ்-அப் குறுந்தகவல்களை கண்டபோது, தன்னிடம் பேசியது போன்றே அவன் வேறு சில பெண்களுடனும் பேசி இருந்ததை கண்டு அந்தப் பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து, அவனிடம் இருந்து விலக முயன்றபோது, தன்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றிவிடுவதாக மிரட்டி, சிறுக சிறுக 3 லட்சம் ரூபாய் வரை அந்தப் பெண்ணிடமிருந்து பணம் பறித்துள்ளான் அஜ்மல்.

 ஒரு கட்டத்தில் நடந்த விஷயத்தை அந்தப் பெண் தனது பெற்றோரிடம் கூற அவர்கள் குடும்ப நண்பர்கள் மூலம், திருவல்லிக்கேணியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த அஜ்மலை அழைத்து வந்து மண்ணடியில் ரஹ்மான் என்பவர் அலுவலகத்தில் வைத்து பணத்தை திருப்பித் தருமாறு பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.

அப்போது அஜ்மலின் செல்போனில் இருந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை அழிக்க முயன்ற போது, அதில் மேலும் பல பெண்களுடன் அவன் நெருக்கமாக இருந்த அந்தரங்க புகைப்படங்கள் இருந்துள்ளன.

பல பெண்களிடம் அவன் மோசடியில் ஈடுபட்டு இருப்பதை அறிந்து, அவனை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் அஜ்மல் மீது புகாரும் கொடுத்துள்ளனர். ஆனால், அவனை போலீசார் கைது செய்து விசாரிக்காமல், மோசடி வழக்கு மட்டும் பதிவு செய்து அனுப்பிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாறாக, அஜ்மலை கடத்தி துன்புறுத்தியாக போலீசாரிடம் ஒப்படைத்த தங்கள் மீதே கடத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். 

மேட்ரிமோனி மூலம் விதவை, கணவனால் கைவிடப்பட்டவர் என பல பெண்களிடம் திருமணம் செய்து கொள்வதாக அஜ்மல் பழகி வருவதாகவும், அதற்கான வாட்ஸ் அப் சாட், பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் படங்கள் போன்ற ஆதாரங்களை கொடுத்த பின்பும் அவன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் புகார் கொடுத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும், பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்து கைதான நாகர்கோயில் காசி போல, இந்த நபரையும் விசாரித்தால் பல திடுக்கிடும் தகவல் வெளிவரும் என்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்.

இதனிடையே ஆரம்பத்திலேயே இந்த வழக்கை முறையாக விசாரிக்காத சிறப்பு உதவி ஆய்வாளர் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் விசாரணை நடத்தி வருகிறார். மேலும் அவனது செல்போனில் இருக்கக் கூடிய பாதிக்கப்பட்ட பெண்களிடம் புகார்களை பெற்று, விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments