இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட பாகிஸ்தான் உளவாளிகளிடம் ரயில்வே, ராணுவம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் மீட்பு

0 4735
இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட பாகிஸ்தான் உளவாளிகளிடம் ரயில்வே, ராணுவம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் மீட்பு

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக வெளியேற்றப்பட்ட அந்நாட்டு தூதரக அதிகாரிகளிடமிருந்து, இந்தியாவின் ரயில்வே மற்றும் ராணுவம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தில் விசா பிரிவில் பணியாற்றி வந்த அபீத் ஹுசைன் தாஹீர் கான் ஆகிய இருவரும், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்கு பணியாற்றி வந்தது உறுதியானதை அடுத்து
இருவரும் 24 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு இருவரும் வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

முன்னதாக அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், பல முக்கிய தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளன. போலியான அடையாள அட்டை, போலியான இந்தியப் பெயர்களுடன் பல்வேறு ரகசிய செயல்களில் அவர்கள் ஈடுபட்டது தெரிய வந்தது. தொடர்ந்து, அவர்களிடம் இருந்து முக்கிய ஆவணங்களும், 25,000 ரூபாய் ரொக்கம், இரண்டு ஐபோன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

தாஹீர் இடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை பரிசோதித்ததில் மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, அந்த உளவாளிகள் நீண்ட காலமாக பணத்திற்காக இந்திய ரயில்வே மற்றும் ஆயுதப்படைகளின் ரகசியங்களை திரட்டி ஐ.எஸ்.ஐக்கு விற்க முயன்றது தெரிய வந்துள்ளது.

மேலும், ஹுசைன் தனது சகோதரன் ஊடகத்துறையை சேர்ந்தவன் என போலியான தகவலை தெரிவித்து, அவனது ஆவணப்படத்திற்காக எனக் கூறி ரயில்வேத்துறை ஊழியர்களிடம் இருந்து பல தகவல்களை சேகரித்துள்ளான். இதன்மூலம் ரயில்கள் மூலம் ஆயுதப்படையினர் மேற்கொள்ளும் பயணங்கள் மற்றும் அதில் எடுத்துச் செல்லப்படும் ஆயுதங்கள் தொடர்பான விவரங்களை சேகரித்துள்ளனர்.

இதேபோல், இந்திய ராணுவப்படைகளின் நகர்வுகள், படைகளை குவிப்பது மற்றும் அவற்றை பயன்படுத்துவது தொடர்பான தகவல்களையும் அவர்கள் சேகரித்து வைத்து இருந்தது கண்டறியப்பட்டு உள்ளது. டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் துரித கதியில் செயல்பட்டு உளவாளிகளை கையும் களவுமாக பிடித்ததன் மூலம், பாதுகாப்பு ரகசியங்கள் அண்டை நாட்டுக்கு கசிவது தடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments