சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு கடனுதவி, முதலீட்டுக்கு ஒப்புதல்

0 4002

நெருக்கடியில் உள்ள சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு உதவ 20 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கவும், 50 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடாக வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், நிதின் கட்கரி, நரேந்திர தோமர் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

நெருக்கடியில் சிக்கியுள்ள சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும், இதனால் 2 லட்சம் நிறுவனங்கள் பயனடையும் என்றும் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

நடுத்தர நிறுவனங்களுக்கான முதலீட்டு உச்ச வரம்பை 10 கோடி ரூபாயில் இருந்து 50 கோடி ரூபாயாகவும், ஆண்டு விற்றுமுதல் வரம்பை 100 கோடி ரூபாயில் இருந்து 250 கோடி ரூபாயாகவும் உயர்த்தியுள்ளதாகப் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்குப் பங்கு முதல், கடன்பத்திரங்கள் ஆகிய வகைகளில் 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு வழங்கப்படும் என அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் அளிப்பதற்காக நெல், கம்பு, கேழ்வரகு, சோளம், சோயா பீன், பருத்தி உள்ளிட்ட 14 வகைப் பயிர்களின் குறைந்த பட்ச ஆதரவு விலையை 50 விழுக்காடு முதல் 83 விழுக்காடு வரை உயர்த்தியுள்ளதாக அமைச்சர் நரேந்திர தோமர் தெரிவித்தார்.

அனைத்து வகை வேளாண் கடன்கள், கடன் தவணைகளைத் திருப்பிச் செலுத்தும் காலம் ஆகஸ்டு இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் நரேந்திர தோமர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments