வேகம் எடுக்கும் கொரோனா புதிய உச்சத்தில் தமிழகம்
தமிழகத்தில், அதிகபட்சமாக ஒரே நாளில் ஆயிரத்து 162 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆயிரத்து 500 ஐ நெருங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11 பேர், கொரோனாவுக்கு இரை ஆகியுள்ளனர்.
நாட்டை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு, தமிழகத்திலும் வேகம் எடுத்து, புதிய உச்சத்தை எட்டி உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆயிரத்து 162 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. இவர்களில் மஹாராஷ்டிராவில் இருந்து தமிழகம் திரும்பிய 32 பேர், டெல்லியில் இருந்து வந்த 10 பேர் உள்பட மொத்தம் 50 பேரும் அடங்குவர்.
கொரோனாவின் பிடியில் சிக்கியவர்கள், குணம் அடைந்து வீடு திரும்பியதால், நாமக்கல், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் வைரஸ் தொற்று இல்லாத நிலை இருந்தது. ஆனால் தற்போது, இங்கு மீண்டும் கொரோனா தலை காட்டி உள்ளது. அதேநேரம், திருப்பூர் வைரஸ் தொற்று இல்லாத மாவட்டமாக நீடித்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு அதிகபட்சமாக 11 பேர் உயிரிழந்ததால், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 184 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை- ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், 3 பெண்கள் உள்பட 6 பேர் கொரோனாவுக்கு பலி ஆகி உள்ளனர். சென்னையைச்சேர்ந்த 3 ஆண்கள், தனியார் மருத்துவனையில் உயிரிழந்தனர்.
திண்டுக்கல்லைச் சேர்ந்த 70 வயது பெண் ஒருவர், மதுரை ராஜாஜி அரசு தலைமை மருத்துவமனையிலும், புதுக்கோட்டையைச்சேர்ந்த 65 வயது ஆண் ஒருவர், உள்ளூர் அரசு மருத்துவமனையிலும் இறந்தனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 413 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், குணம் அடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
12 வயதுக்கு உட்பட்டவர்களில 634 சிறுமிகள் உள்பட மொத்தம் ஆயிரத்து 322 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களில் சுமார் 20 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.
60 வயதுக்கு மேற்பட்டவர்களை பொறுத்தவரை, 840 மூதாட்டிகள் உள்பட மொத்தம் 2 ஆயிரத்து 200 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பும், உயிர்ப்பலியும் உயர்ந்து வரும் நிலையில், மிரட்டும் கொரோனாவை விரட்டும் பணியில் சுகாதாரத்துறை, முழு மூச்சுடன்
களமிறங்கி உள்ளது.
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,162 பேருக்கு கொரோனா பாதிப்பு | #Coronavirus | #Covid19 https://t.co/VrlXeqQ190
— Polimer News (@polimernews) June 1, 2020
Comments