வலுவடையும் போராட்டம் புகையால் சூழ்ந்த வெள்ளை மாளிகை..!
அமெரிக்காவில் கருப்பின நபரின் கொலைக்கு நீதி கோரி 6 வது நாளாக வலுவடைந்து வரும் போராட்டத்தின் உச்சமாக வெள்ளை மாளிகை முன்பு போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் மூண்டதால், அப்பகுதி போர்க்களமாக காட்சியளித்தது.
அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் நகரத்தில் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர், போலீஸ் அதிகாரி ஒருவர் முட்டியால் கழுத்தை அழுத்தியதால் மூச்சு விடமுடியவில்லை என்று கெஞ்சும் வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து பிளாய்ட் உயிரிழந்ததால் அவரது மரணத்துக்கு நீதி கேட்டும் இனபாகுபாட்டிற்கு எதிராகவும் அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளது. வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வெள்ளை மாளிகை வளாகத்துக்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்களை போலீசார் தடுக்க முயன்றதால் வன்முறை மூண்டது. கண்ணீர் புகை மற்றும் மிளகு தூள் வீசி போராட்டக்காரர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். ஆனாலும் முக்கிய கட்டிடங்களின் ஜன்னல்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீவைக்கப்பட்டது. மேலும் கார்களை குப்புற கவிழ்த்து தீ வைத்து போராட்டக்காரர்கள் கொளுத்தினர். இதனால் வெள்ளை மாளிகையை சுற்றி தீப்பிழம்பாகவும் புகை மண்டலமாகவும் காட்சியளித்தது.
நியூயார்க் நகரில் தொடக்கத்தில் அமைதியாக நடந்த போராட்டத்தில் பின்னர் கலவரம் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் பலரை போலீசார் கைது செய்தனர். சாலையோரம் இருந்த குப்பைகளுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீவைத்தனர்.
மின்னியாபொலீஸ் நகரில் நெடுஞ்சாலையை மறித்து நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை நோக்கி பெரிய கண்டெய்னர் லாரி ஒன்று மோத வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் லாரியை மடக்கி பிடித்து ஓட்டுநரை போராட்டக்காரர்கள் தாக்கினர். அவர்களை தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர்.
மாசசூசெட்ஸ் (MASSACHUSETTS) மாநிலத்தின் போஸ்டன் நகரிலும் கொலம்பியாவின் சாண்டா மோனிகா நகரிலும் இனபாகுபாட்டிற்கு எதிராக போரட்டம் நடத்தியவர்களை கண்ணீர் புகை வீசியும், ரப்பர் தோட்டாக்களால் சுட்டும் போலீசார் அப்புறப்படுத்தினர்.
அமெரிக்கா மட்டுமின்றி நியூசிலாந்திலும் பிளாய்ட் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம் நடந்தது. தலைநகர் வெலிங்டனில், ஆயிரக்கணக்கானோர் நாடாளுமன்ற கட்டிடத்திலிருந்து அமெரிக்க தூதரகத்திற்கு பேரணியாக சென்று கோஷமிட்டனர்.
போராட்டத்தை கட்டுப்படுத்த, 25 நகரங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, இரவு 8 மணிக்கு மேல் மக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், போர்ட் லேண்டில், தடை உத்தரவை மீறி கண்டனப் பேரணி நடத்திய ஆர்பாட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் மோதல் வெடித்தது.
அங்கிருந்த வாகனங்களுக்கு தீ வைத்த ஆர்பாட்டக்காரர்களை, போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் அதிக சப்தம் எழுப்பி அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய கையெறி குண்டுகளை வீசி அப்புறப்படுத்தினர்.
Comments