கேரளத்தில் தொடங்கியது...தென்மேற்குப் பருவமழை...
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அங்கு 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களுக்கு அதிக மழைப் பொழிவைத் தருவது தென்மேற்குப் பருவமழை ஆகும். ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்குவது வழக்கமாகும்.
இந்த ஆண்டில் கேரளத்தில் ஜூன் ஒன்றாம் தேதியே பருவமழை தொடங்கி அதன்பின் கர்நாடகம், கோவா, மகாராஷ்டிரம், குஜராத் மாநிலத்தின் கடற்கரைப் பகுதிகளிலும் தீவிரமடையும் என வானிலை ஆய்வுத்துறை அறிவித்திருந்தது. அதன்படி கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது. திருவனந்தபுரத்திலும் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் அதிகாலையில் இருந்தே விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
இதனால் வெப்பநிலை தணிந்திருப்பதுடன் குளிர்ந்த காற்றும் வீசுகிறது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டை, ஆலப்புழை, கோட்டயம், எர்ணாக்குளம், இடுக்கி, மலப்புரம், கண்ணூர் ஆகிய 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுத்துறை மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. செவ்வாயன்று எர்ணாக்குளம், திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கும், புதனன்று கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கும் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கேரளா மற்றும் அதை ஒட்டியுள்ள தமிழக பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக, வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Comments