அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்துக்கு தமிழக அரசு ஒப்புதல் கடிதம் வழங்கவில்லை

0 1614

மாணவர் சேர்க்கையில் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு மத்திய அரசு அனுமதி கொடுக்காததால், அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்துக்கு தமிழக அரசு ஒப்புதல் கடிதம் கொடுக்கவில்லை.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சீர்மிகு பல்கலைக்கழகம் என்ற சிறப்பு அந்தஸ்து வழங்க முன்வந்த மத்திய அரசு, அதற்கான ஒப்புதல் கடிதத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தது. ஆனால், மாணவர் சேர்க்கையில் 69 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்படும் என்ற உத்தரவாதத்தை மத்திய அரசு வழங்காததால், நேற்றைக்குள் வழங்க வேண்டிய ஒப்புதல் கடிதத்தை தமிழக அரசு வழங்கவில்லை.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு தெளிவான விளக்கம் கொடுத்தால் சிறப்பு அந்தஸ்தை பெற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.

கிராமப்புற மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், சிறப்பு அந்தஸ்து கிடைக்காவிட்டாலும் மத்திய அரசு கொடுப்பதாக சொல்லிய அத்தனை வசதிகளையும் மாநில அரசு செய்து தரும் என்று அன்பழகன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்கினால், ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் வீதம், 5 ஆண்டுகளுக்கு 1,000 கோடி ரூபாய் நிதியுதவி மற்றும் பல்வேறு சலுகைகள் தரப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments