வேகம் எடுத்த கொரோனா புதிய உச்சத்தில் தமிழகம்
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் ஆயிரத்து 149 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
24 மணி நேரத்தில் ஆயிரம் பேருக்கு மேல், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை. அதேபோல, ஒரே நாளில் அதிகபட்சமாக 13 பேர் , கொரோனாவுக்கு இரை ஆகி உள்ளனர்.
இந்தியாவை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு, தமிழகத்தில் புதிய உச்சத்தை எட்டி உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆயிரத்து 149 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. மஹாராஷ்டிராவில் இருந்து சொந்த ஊர் திரும்பிய 62 பேருக்கும், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மியான்மரில் இருந்து திரும்பிய 3 பேர் உள்பட மொத்தம் 95 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பிற மாநிலங்களில் இருந்து ரயிலில் தமிழகம் திரும்பிய 26 பேரும் இதில் அடங்குவர்.
சென்னை மற்றும் மதுரையில் தலா ஒரு மாத பெண் குழந்தை முதல் 4 வயது குழந்தை வரை, தமிழகம் முழுவதும் மொத்தம்12 குழந்தைகள், ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு அதிகபட்சமாக 13 பேர் உயிரிழந்ததால், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 173 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், 60 வயது பெண் ஒருவர் உள்பட 5 பேர் கொரோனாவுக்கு பலி ஆகி உள்ளனர்.
சென்னையைச்சேர்ந்த 3 ஆண்கள், தனியார் மருத்துவமனைகளில் உயிரிழந்தனர். நாமக்கல் அரசு மருத்துவமனையில் 49 வயது ஆண்
ஒருவர், கொரோனாவுக்கு பலி ஆகி விட்டார்.
மதுரை - ராஜாஜி அரசு தலைமை மருத்துவ மனையில் 70 வயது பெண் ஒருவரும், சென்னை - ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவ மனையில், 70 வயது ஆண் ஒருவரும், கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 757 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், குணம் அடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 757 ஆக உயர்ந்துள்ளது.
12 வயதுக்கு உட்பட்டவர்களில் 618 சிறுமிகள் உள்பட மொத்தம் ஆயிரத்து 286 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களில் 6 ஆயிரத்து 863 பெண்கள், 9 திருநங்கைகள் உள்பட சுமார் 19 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.
60 வயதுக்கு மேற்பட்டவர்களை பொறுத்தவரை, 778 மூதாட்டிகள் உள்பட மொத்தம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவில், ஒரே நாளில் அதிகமானோர் வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு இருப்பதும், அதிக உயிரிழப்பை சந்தித்திருப்பதும் இதுவே முதன்முறை. எனவே, வேகமெடுக்கும் கொரோனாவால், தமிழகம் உச்ச அச்சத்தை சந்தித்துள்ளது.
#UPDATE: 1,149 new COVID-19 positive cases reported in Tamil Nadu today bringing the total to 22,333@CMOTamilNadu @Vijayabaskarofl @MoHFW_INDIA
— National Health Mission - Tamil Nadu (@NHM_TN) May 31, 2020
For more information visit: https://t.co/YJxHMQw9jk
Comments