கருப்பின இளைஞர் படுகொலை வலுக்கும் போராட்டங்கள் பல நகரங்களிலும் ஊரடங்கு
அமெரிக்காவில் கருப்பின இளைஞர் பிளாய்ட் படுகொலைக்கு நீதி கேட்டு நடைபெற்று வரும் பொது மக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதால், பல்வேறு நகரங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மின்னசொட்டா மாநிலம் மின்னாபொலிஸ் நகரில், கருப்பின இளைஞர் ஒருவரை கைது செய்ய முயன்ற போலீஸ், அவரை கீழே தள்ளி முழங்காலால் கழுத்தை நெருக்கிய வீடியோ வெளியானது.
அதில் தன்னால் மூச்சு விட முடியவில்லை என அந்த இளைஞர் கூறிய வாசகம் காண்போரை கலங்க செய்ததது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜார்ஜ் பிளாய்ட் எனும் அந்த இளைஞர் உயிரிழந்தார்.
இதையடுத்து கருப்பினத்தவர்களுக்கு எதிரான அடக்குமுறை நீடிப்பதாகக் கூறி பல்வேறு இடங்களிலும் இளைஞரின் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டங்கள் வெடித்தன.
சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் நிகழ்ந்ததால் அதனை கட்டுப்படுத்த, போலீசார் துப்பாக்கிச் சூட்டிலும் ஈடுபட்டனர். இந்நிலையில் மின்னசொட்டா மாநிலத்தை தொடர்ந்து லாஸ் ஏஞ்சலீஸ், சிகாகோ, மியாமி உட்பட பல்வேறு நகரங்களிலும் போராட்டம் வலுவடைந்து வருகிறது.
உயிரிழந்த இளைஞர் இறுதியாக உச்சரித்த ‘I can’t breathe’ எனும் வாசகத்தை முழக்கமிட்டவாறு மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதனால் அட்லாண்டா, லாஸ் ஏஞ்சலீஸ், பிலதெல்பியா, டென்வர், சின்சினாட்டி, போர்ட்லேண்ட், லூயிஸ்வில், கெண்டக்கி, ஓரிகன் ஆகிய நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே வெள்ளை மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், பாதுகாப்பு வளையத்தை தகர்த்திருந்தால், கொடூரமான நாய்களை கொண்டும், பயங்கர ஆயுதங்களை கொண்டும் வரவேற்கப்பட்டிருப்பார்கள் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆனால் அது போல் ஏதும் நிகழ்ந்ததாக தாம் பார்க்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே 2ம் உலகப் போருக்கு பின்னர் முதன் முறையாக மின்னசொட்டா தேசிய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து 4 நாட்களாக நீடித்து வரும் தீவைப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்களை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக மின்னசொட்டா ஆளுநர் கேட்டுக் கொண்டால் அம்மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட ராணுவத்தை அனுப்ப தயார் என பெண்டகன் தெரிவித்துள்ளது.
Comments