தமிழகத்தில் ஜூன் 1 முதல்.. பொதுப் போக்குவரத்து தொடக்கம்..!

0 26022

தமிழகத்தில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர மற்ற மண்டலங்களில் 50 விழுக்காடு பேருந்துகள் மட்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

முதல் மண்டலத்தில் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல் மாவட்டங்கள் உள்ளன. இரண்டாவது மண்டலத்தில் தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் உள்ளன. மூன்றாவது மண்டலத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் உள்ளன.

நான்காவது மண்டலத்தில்  நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் உள்ளன. ஐந்தாவது மண்டலத்தில் திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்கள் உள்ளன. ஆறாவது மண்டலத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்கள் உள்ளன.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர மற்ற மண்டலங்களுக்குள் 50 விழுக்காடு பேருந்துகள் இயக்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பேருந்துகளும் இயக்க அனுமதிக்கப்படுகிறது.

பேருந்துகளில் உள்ள மொத்த இருக்கைகளில், 60 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். மண்டலத்திற்குள் பயணிப்பவர்களுக்கும், பொதுப் போக்குவரத்துப் பேருந்துகளில் பயணிக்கவும்  இ-பாஸ் தேவையில்லை.

மண்டலங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கிடையேயுமான பேருந்து போக்குவரத்துச் சேவைகளுக்குத் தடை தொடர்கிறது. அரசால்  வெளியிடப்பட உள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றிப் பொதுப் போக்குவரத்திற்கான பேருந்துகள் இயக்கப்படும்.

அனைத்து வகையான வாகனங்களும் அந்தந்த மண்டலங்களுக்குள் இயங்க அனுமதிக்கப்படுகிறது. அவைகளுக்கு இ-பாஸ் தேவையில்லை. வெளி மாநிலங்களுக்குச் சென்று வரவும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரவும், மண்டலங்களுக்கிடையே சென்று வரவும், இ-பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments