தூத்துக்குடியை கலங்கடிக்கும்.. தலை வெட்டி கூலிப்படை..! மாணவர் கொலை பின்னணி
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே கல்லூரி மாணவர் தலைதுண்டித்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொடூர கூலிப்படையின் தொடர் அட்டகாசம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அடுத்த தலைவன்வடலி கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் சத்தியமூர்த்தி தலைதுண்டித்து கொல்லப்பட்ட சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் துண்டிக்கப்பட்ட மாணவர் சத்திய மூர்த்தியின் தலையை தேடிய காவல்துறையினர், சனிக்கிழமை காலையில் தான் அதனை கண்டு பிடித்தனர்
கடந்த பொங்கல் தினத்தன்று ஊருக்குள் அதிவேகமாக இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்களை தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக சாதி ரீதியாக சத்தியமூர்த்தியை எதிர் தரப்பினர் கொலை செய்துள்ளதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அதே நேரத்தில் இந்த கொலையின் பின்னணியில், தென் மாவட்டத்தில் பதுங்கி இருந்து தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டி வரும் கொடூர கூலிப்படை கும்பல் ஒன்றின் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இதற்கு முன்பு நடந்த கொலை சம்பவங்களில் தலையை தனியாக வெட்டி எடுத்துச்சென்று வீசிய வழக்குகளை எல்லாம் எடுத்து ஒப்பிட்டு பார்த்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை பிடித்து விசாரித்து வரும் காவல்துறையினர் இதில் கூலிப்படையாக செயல்பட்ட நபர்கள் யார்? யார் ? இந்த சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் கூலிப்படைகும்பல் எது ? என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதற்கிடையே தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான இளைஞர்கள் கையில், கஞ்சா தட்டுப்பாடின்றி கிடைப்பதாலும், பலர் மணல் கடத்தலில் ஈடுபட்டு கையில் ஏராளமாக பணம் வைத்திருப்பதாலும் சிறு சிறு பிரச்சனைகளுக்கு கூட கையில் கத்தியை தூக்கிக் கொண்டு சண்டைக்கு செல்லும் அவலம் அரங்கேறுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
ஆத்தூர் காவல் நிலைய பகுதியில் சில தினங்களுக்கு முன்பு ஆடு களவாடிய தகராறில் 12 பேர் கொண்ட கூலிப்படையினரால் 5 பேர் கத்தியால் குத்தப்பட்டனர். அதில் ஒருவர் பரிதாபமாக பலியானார். கஞ்சாவுக்குவும், மதுவுக்கும் அடிமையாகி கூலிப்படையாக சென்று கொலை செய்யும் நிலை தொடர்வதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஏற்கனவே நடந்த கத்திக்குத்து சம்பவத்திற்கு பின்னரும் ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி, மணல் கடத்தலையும் கஞ்சா கும்பலையும் கட்டுப்படுத்த தவறியதும், அங்குள்ள காவலர்கள் சிலர் சாதியுணர்வுடன் செயல் படுவதும் குற்றசம்பவங்களில் ஈடுபடும் நபர்களை எளிதாக தப்ப வைத்து விடுவதாக குற்றஞ்சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்
தூத்துக்குடி மக்களின் அமைதியை கெடுத்து சாதிய மோதலை தூண்டும் விதமாக இந்த கொலை சம்பவங்கள் அடுத்தடுத்து நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால், ரவுடிகளையும் கூலிப்படையினரையும் அடையாளம் கண்டு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்பால கோபாலன் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!
Comments