கொரோனாவால் இறந்த பெண்ணின் சடலம்..நெல்லைக்கு கடத்தல்..! சென்னை வியாபாரி சிக்கினார்
தூத்துக்குடியில் சமூக விலகலை கடைபிடிக்காமல் சுற்றிய ஆடிட்டரால் 13 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ள நிலையில், கொரோனாவால் இறந்த பெண்ணின் உடலை தனியார் ஆம்புலன்சில் ஏற்றி நோயாளி என்று கூறி சென்னையில் இருந்து நெல்லைக்கு கடத்திச்சென்ற வியாபாரி உள்ளிட்ட 6 பேரை பிடித்து தனிமைப்படுத்தியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா எண்ணிக்கையில் 200ஐ கடந்துவிட்ட நிலையில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகின்றது.
அந்தவகையில் தூத்துக்குடியில் தங்கி வேலைபார்த்துவரும் கோவங்காடு கிராமத்தை சேர்ந்த ஆடிட்டர் ஒருவர் தென் திருப்பேரை கிராமத்திற்கு துக்க நிகழ்ச்சிக்கு சென்று வந்துள்ளார். அதன் பின்னர் கோவங்காட்டில் இளைஞர்களுடன் கைப்பந்து விளையாடிச் சென்றவருக்கு, திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கோவங்காடு ஊராட்சி பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஆடிட்டர் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற ஊரில் மட்டும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் ஆடிட்டர் அண்மையில் கோவில்பட்டிக்கு சென்று வந்ததால் அங்கு ஆய்வு மேற்கொண்டதில் 5 பேருக்கு தொற்றுக்கு கண்டறியப்பட்டது. சமூக விலகலை கடைபிடிக்காத ஆடிட்டரின் அலட்சியமான பயணத்தால் மொத்தமாக 13 பேருக்கு கொரோனா பரவி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ஆடிட்டர் சென்று வந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பிய 20 பேரை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.
அதே போல சென்னை அடுத்த செங்கல்பட்டில் மளிகை கடை நடத்தி வந்த வியாபாரி ஒருவர் தனது கடைக்கு பொருட்கள் வாங்க கோயம்பேடு சென்று வந்த நிலையில் அவர் மூலமாக அவரது மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. வியாபரிக்கு பெரிய அளவிலான பாதிப்பு இல்லாத நிலையில் அவரது மனைவி 4 தினங்கள் குளிர்காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார்.
அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் மருந்தகங்களில் மருந்து மாத்திரை வாங்கி கொடுத்துள்ளார் வியாபாரி. இதில் குணமடையாத அவரது மனைவி பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
தனியார் ஆம்புலன்சு ஓட்டுனர் துணையுடன், இந்த தகவலை மறைத்து சடலத்தை, நோயாளி என ஏமாற்றி தூத்துக்குடி மாட்டம் பூச்சிக்காட்டிற்கு கொண்டு சென்றுள்ளார் வியாபாரி. நெல்லை கங்கை கொண்டான் சோதனை சாவடியில் சிக்கிக் கொண்ட போது அங்கிருந்தவர்களிடம் பணத்தை கொடுத்து பிணத்துடன் ஊருக்குள் தடையின்றி நுழைந்ததாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.
அந்த ஊர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், பிரச்சனையாகி உள்ளது. இதையடுத்து மனைவியின் சொந்த ஊரான நவ்வலடிக்கு கொண்டு சென்று சடலத்தை அடக்கம் செய்ய முயன்றுள்ளார், அந்த பகுதிமக்கள் போலீசுக்கு தகவல் அளித்ததால் காவல்துறையினருடன் அங்கு விரைந்து வந்த அதிகாரிகள், வியாபாரியிடம் இருந்து அவரது மனைவியின் சடலத்தை கைப்பற்றி நாகர்கோவிலில் உள்ள ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நடத்தப்பட்ட சோதனையில் வியாபாரியின் மனைவி கொரோனாவால் பலியானது உறுதி செய்யப்பட்டது.
சடலத்துடன் செங்கல்பட்டில் இருந்து சென்ற வியாபாரி உள்ளிட்ட 6 பேர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்க் கொள்ளப்பட்டு உள்ளது.
மக்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து சமூக இடைவெளியை கடை பிடிக்க வேண்டும், அனாவசியமாக வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும், அத்தியாவசியமாக வெளியில் செல்லும் போது முககவசம் அணிவதையும், சென்று வருபவர்கள் கைகழுவும் பழக்கத்தைடும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
கொரோனா அறிகுறி தென்பட்டால் மருத்துவர் அறிவுரைப்படி தனிமை சிகிச்சை எடுத்துக் கொண்டால், உயிரை காப்பாற்றிக் கொள்ளலாம் என்றும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டினால், கொரோனா தொற்றுவராமல் காத்துக் கொள்ளலாம் என்றும் கூறுகின்றனர் சுகாதாரதுறையினர்...
அதே நேரத்தில் கொரோனாவை பொறுத்தவரை அலட்சியத்தின் விலை உயிரிழப்பு என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். கொரோனாவை வெல்லுங்கள்..!
கொரோனாவால் இறந்த பெண்ணின் சடலம்..நெல்லைக்கு கடத்தல்..! சென்னை வியாபாரி சிக்கினார் #Chennai | #Nellai | #CoronaVirus | #Covid19 https://t.co/sMDNMxm5HO
— Polimer News (@polimernews) May 31, 2020
Comments