அமெரிக்காவில் கலவரத்தைக் கட்டுப்படுத்த ராணுவத்தை அழைக்க அதிபர் டிரம்ப் முடிவு

0 7993

கருப்பின இளைஞர் படுகொலை தொடர்பாக அமெரிக்காவில் நடந்து வரும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் முதன்முறையாக ராணுவத்தை அழைக்க முடிவு செய்துள்ளார்.

அமெரிக்காவின் மின்னசொட்டா மாகாணத்தில் உள்ள மின்னாபொலிஸ் என்ற இடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் கருப்பின இளைஞர் ஒருவரை போலீசார் சரமாரியாகத் தாக்கினர். இந்த நிகழ்வில் ஜார்ஜ் ஃப்ளாயிட் என்ற அந்த இளைஞர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து மின்னசொட்டாவில் கலவரம் வெடித்தது. அங்கிருந்த காவல்நிலையம் தீ வைத்து எரிக்கப்பட்டது.

தொடர்ந்து ஜார்ஜ் ஃப்ளாயிட்டின் மரணத்திற்கு நீதி கேட்டு வடக்கு கரோலினா, நியூயார்க், லாஸ் ஏஞ்சலிஸ் மான்ஹாட்டன் உள்ளிட்ட பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் பரவின. அதிபரின் வெள்ளை மாளிகை முற்றுகையிடப்பட்டதால், மாளிகை இழுத்து மூடப்பட்டது. சில இடங்களில் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதுடன், துப்பாக்கிச் சூடும் நடத்தினர்.

ஆக்லாந்து உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி பேரணியாகச் சென்றனர். அப்போது காவல்துறையினருடன் ஏற்பட்ட மோதலில் இரு காவலர்கள் கொல்லப்பட்டனர்.

தொடர்ந்து போராட்டத்திலும், வன்முறையிலும் ஈடுபடுபவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். பல்வேறு பகுதிகளிலும் கடைகள் உடைப்பு, வாகனங்களுக்கு தீ வைப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறி வருவதால் கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீசார் திணறி வருகின்றனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரங்கேறி வரும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த ராணுவத்தை வரவழைக்கவும், ரோந்துப் பணியில் ஈடுபடுத்தவும் அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் எஸ்பருடன் அவர் விவாதித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அவ்வாறு ராணுவம் களமிறக்கப்பட்டால் 1992ம் ஆண்டு லாஸ் ஏஞ்சலிஸ் கலவரத்துக்குப் பின் தற்போதுதான் ராணுவம் வீதிகளில் வலம் வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே மின்னசொட்டா பகுதியில் ஊரடங்கை நிறைவேற்றுவதற்கான உத்தரவில் அம்மாகாண ஆளுநர் கையெழுத்திட்டார். இதன்படி இரவில் வெளியில் சுற்றுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments