கிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு - அதிகாரிகள் ஆய்வு

0 8387
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் படையெடுத்து வந்து உள்ளதாக கூறப்படும் வெட்டுக்கிளிகளால் விவசாய பயிர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் படையெடுத்து வந்து உள்ளதாக கூறப்படும் வெட்டுக்கிளிகளால் விவசாய பயிர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வேப்பனஹள்ளியையடுத்த நேரலகிரி கிராமத்தில் நேற்று மாலை நூற்றுக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்தன.

இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பீதியடைந்தனர். இதையடுத்து இன்று வேளாண்மை துறை இணை இயக்குனர் ராஜசேகர் உள்ளிட்ட அதிகாரிகள் அப்பகுதியில் நேரில் ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பின் செய்தியாளரிடம் பேசிய அவர்கள் வடமாநிலங்களில் தாக்கியுள்ள பாலைவன வெட்டுக்கிளிகள் போல் இவை கிடையாது என்றும், இவைகளால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் தெரிவித்தனர். மேலும், இவ்வகை வெட்டுக்கிளிகளை சாதாரண தண்ணீரில் வேப்பெண்ணெய் கலந்து தெளித்தால் கட்டுப்படுத்தி விடலாம் எனவும் தெரிவித்தனர். 

இதனிடையே, வெட்டுக்கிளி தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள, தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக தலைமை செயலகத்தில் இன்று மாலை ஆலோசனை நடைபெறுகிறது. தமிழகத்திற்கு பாலைவன வெட்டுக்கிளி படையெடுப்பு வராது என்றாலும், வந்தால் அவற்றை ஒழிக்க செய்ய வேண்டிய வழிமுறைகளை தமிழக வேளாண் துறை வெளியிட்டது.

அதில் பயிர் பாதுகாப்பு மருந்தான வேம்பு சார்ந்த பூச்சி கொல்லி மருந்துகளை பயன்படுத்தலாம் என்றும், மாலத்தியான் மருந்தை டிராக்டர்கள் மற்றும் தீ அணைக்கும் இயந்திரங்கள் மூலமாக பரவலாக அனைத்து பகுதிகளிலும் தெளிக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. இதேபோல, வெட்டுக்கிளிகளை உண்ணும் கோழி போன்ற பறவைகளை அதிக அளவில் வளர்க்கலாம், அரசு அனுமதியுடன் பூச்சி மருந்தை ஒட்டுமொத்தமாக வான்வெளியிலிருந்து தெளித்து கட்டுப்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் நீலகிரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்கம் காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்துவது குறித்தும், மற்ற மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் தலைமை செயலகத்தில் வேளாண்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி தலைமையில் ஆலோசனை நடைபெறவுள்ளது.

குமரி மாவட்டத்திலும் ஒரு சில பகுதிகளில் குறைந்த அளவிலான வெட்டுக்கிளிகள் காணப்படுவதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். வேர்கிளம்பி அடுத்த முளவிளை பகுதியில் ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திலுள்ள ரப்பர் மற்றும் வாழை மரங்களில் வெட்டுக்கிளிகள் இலைகளை சாப்பிட்டு நாசம் செய்து வருகின்றன.

மேலும் சுற்றுவட்டாரங்களிலும் இதே போல் குறைந்த அளவிலான வெட்டுக்கிளிகள் காணப்படுகின்றன. இது குறித்து வருவாய்த்துறை, காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ள நிலையில், வேளாண் துறை அதிகாரிகளும் ஆய்வு செய்து மேலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments