ஊரடங்கு- மேலும் தளர்வுகளுடன் நீட்டிப்பு ?

0 36376
ஊரடங்கு- மேலும் தளர்வுகளுடன் நீட்டிப்பு ?

ஐந்தாம் கட்ட ஊரடங்கில், சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட 13 நகரங்களில் கட்டுப்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியாவின் கொரோனா பாதிப்பு ஒருலட்சத்து 70 ஆயிரத்தை எட்டியுள்ள நிலையில் பல்வேறு மாநில அரசுகள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீதம் பேர் 13 நகரங்களைச் சேர்ந்தவர்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதனால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மும்பை, புனே, தானே, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், இந்தூர், அகமதாபாத், ஜெய்ப்பூர், ஜோத்புர் ஆகிய இந்த 13 நகரங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் மேலும் 15 நாட்களுக்கு நீடிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான வழிகாட்டல்களும் இன்று வெளியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களின் தலைமைச் செயலர்களுடன் மத்திய அமைச்சக செயலர் ராஜீவ் சவுபா வியாழக்கிழமை ஆலோசனை நடத்தியுள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அனைத்து மாநில முதலமைச்சர்களின் கருத்தை கேட்டுள்ளார்.இதையடுத்து அவர் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து ஊரடங்கு தளர்வுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். ஊரடங்கு தளர்வா நீட்டிப்பா என்பது குறித்து மாநில அரசுகளுக்கே அதிகாரம் வழங்க முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாப், டெல்லி , கர்நாடகா, தெலுங்கானா போன்ற பல மாநிலங்கள் ஊரடங்கு தளர்வை கோரியுள்ளன.

அனைத்து வகை பொருளாதார சீரமைப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில் மாநில அரசுகள் கவனம் செலுத்தி வருகின்றன. வழிபாட்டுத் தலங்களைத் தொடங்கவும் கர்நாடகம் மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

மெட்ரோ ரயில்களை இயக்க டெல்லி அரசும் மின்சார ரயில்களை இயக்க மகாராஷ்ட்ர அரசும் மத்திய அரசை கோரியுள்ளன. ஆயினும் தற்போதைய சூழலில் மெட்ரோ மற்றும் மின்சார ரயில்கள் சேவைகளுக்கான தடை நீடிக்கும் என்றே கூறப்படுகிறது.

திரையரங்குகள், பள்ளிகள் போன்றவை ஜூன் மாதம் முழுவதும் திறப்பதற்கான வாய்ப்புகளும் இல்லை. ஆயினும் இதர தொழில்கள் அனைத்தும் தளர்த்தப்படும் என்றும் மிகக்குறைந்தளவு கட்டுப்பாடுகளுடன் 5ம் ஊரடங்கு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments