குறுங்காடுகள் வளர்ப்பில் தீவிரம்... வறட்சியைப் போக்கும் முயற்சி !
ராமநாதபுரம் மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை படிப்படியாக அழித்துவிட்டு மண் வளம் காக்கும் மரங்களை வளர்த்து குறுங்காடுகளை உருவாக்கும் திட்டத்தை மாவட்ட நிர்வாகம் முன்னெடுத்து வருகிறது.
வறட்சி மாவட்டம் என்று பெயர் பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தின் வறட்சிக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது சீமைக்கருவேல மரங்கள். வறட்சி நிலையைப் போக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சீமைக் கருவேல மரங்களை அழித்துவிட்டு, அதற்கு மாற்றாக வேம்பு,தேக்கு, நெல்லி,பாதாம் புங்கை, பப்பாளி, முருங்கை,மா,உள்ளிட்ட 500 வகையான மரங்களை வளர்த்தெடுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இதுவரை சுமார் 350 ஏக்கரில் சீமைக் கருவேல மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்டம் முழுவதும் ஆயிரத்து 217 ஏக்கரில் 5 லட்சம் மரக்கன்றுகளைக்கொண்டு 783 குறுங்காடுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீமைக்கருவேல மரங்கள் அழிக்கப்பட்ட பகுதிகள் முழுவதிலும் ஈரப்பதத்தை பாதுகாக்க முறையாக சுத்தம் செய்யப்பட்டு பனங்கீற்று மற்றும் தென்னங்கீற்று அறுவை துகள்கள் மற்றும் கூலங்கள் நிரப்பி செப்பனிடப்பட்டுள்ளன. நூறுநாள் பணியாளர்களை கொண்டு தினமும் காலை மாலை தண்ணீர் ஊற்றி மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
வறட்சிக்கு எதிரான நீண்ட கால தீர்வாக ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வரவேற்பு கிடைத்துள்ளது.
Comments