ரூ.330 கோடி - நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை திட்டப் பணிகள் தொடக்கம்
330 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை திட்டப் பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுமேம்பாட்டுத் துறை சார்பில், மொத்தம் 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு கட்டமைப்புகளை காணொலிக் காட்சி மூலமாக திறந்துவைத்தார்.
பள்ளிக் கல்வித் துறை சார்பில் தருமபுரி, அரியலூர், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாகப்பட்டினம், பெரம்பலூர், திருவண்ணாமலை, தேனி, திருவள்ளூர், திருவாரூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 57 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 27 பள்ளிக் கட்டடங்கள், 2 ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனக் கட்டடங்கள், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்கள்.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி அபிநயா, அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லவும், சர்வதேச விண்வெளி அறிவியல் மாநாட்டில் பங்கேற்க ஏதுவாகவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் வழங்கினார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தேனிமாவட்டம், பழனிசெட்டிப்பட்டி பேரூராட்சியில் 34 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற பாதாள சாக்கடைத் திட்டத்தை காணொலிக் காட்சி மூலமாக முதலமைச்சர் திறந்துவைத்தார். சென்னை, அரியலூர், தஞ்சாவூர், ஈரோடு, தேனி, கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, நாகப்பட்டினம், திருவாரூர், தருமபுரி, இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 296 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான திட்டப் பணிகளையும் முதலமைச்சர் திறந்துவைத்தார்.
Comments