வெட்டுக்கிளிகளை அழிக்க விமானப்படை ஹெலிகாப்டர்...!

0 6216
வெட்டுக்கிளிகளை அழிக்க விமானப்படை ஹெலிகாப்டர்

பதினாறு மாநிலங்களில் வெட்டுக்கிளியால் பயிர்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என எச்சரித்துள்ள அரசு, விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் பூச்சிக் கொல்லி தெளித்து அவற்றை அழிக்கத் தயாராகி வருகிறது.

பஞ்சாப், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், குஜராத், உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் பயிர்களை அழித்து வருவதால் நாட்டின் வேளாண்மை பாதிக்கப்படும் என ஐ.நா. அமைப்பு எச்சரித்துள்ளது.

இதையடுத்து 16 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. வெட்டுக்கிளிகள் ஒரு நாளில் 150 கிலோமீட்டர் தொலைவு வரை பறந்து செல்லும் என்றும், ஒரு சதுரக் கிலோமீட்டர் பரப்பில் உள்ள வெட்டுக்கிளிகள் 35 ஆயிரம் மனிதர்களுக்கு ஒரு நாளுக்குத் தேவைப்படும் உணவை ஒரே நாளில் தின்று அழித்துவிடும் என்றும் உணவு மற்றும் வேளாண் அமைப்பு தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரத்தின் விதர்ப்பா மண்டலத்தில் ஆரஞ்ச் தோட்டங்களையும், மாந்தோப்புகளையும், நெற்பயிர்களையும் வெட்டுக்கிளிகள் அழித்து வருகின்றன. ராஜஸ்தானில் 24 மாவட்டங்களில் 95 ஆயிரம் எக்டேர் பரப்பில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசின் முயற்சியால் 73ஆயிரம் எக்டேரில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பஞ்சாப், அரியானா, உத்தரக்கண்ட் மாநிலங்களிலும் வெட்டுக்கிளிகளின் தாக்குதலைத் தடுக்கக் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெட்டுக்கிளிகளை அழித்துப் பயிர்ச் சேதத்தைத் தவிர்ப்பது குறித்து மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அதிகாரிகளுடன் கலந்தாய்வு நடத்தினார். அதன்பின் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெட்டுக்கிளி கட்டுப்பாட்டு அலுவலகங்களில் 47 தெளிப்பான்கள் மட்டுமே உள்ளதாகவும், பிரிட்டனின் மைக்ரான் நிறுவனத்திடம் இருந்து 60 தெளிப்பான்களை இறக்குமதி செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மருந்து தெளிக்க டிரோன்களை வாங்க அறிவிப்பு கொடுத்துள்ளதாகவும், அடுத்த 15 நாட்களில் இவை வந்துவிடும் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பூச்சிக்கொல்லி தெளிக்க விமானப்படை ஹெலிகாப்டர்களைத் தயார்படுத்தி வருவதுடன் 11 கண்காணிப்பு நிலையங்களையும் மத்திய அரசு அமைத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments