ஹாங்காங்கின் தன்னாட்சி பறிப்பு?ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உடனடியாக விவாதிக்க வேண்டும் என அமெரிக்க கருத்து

0 3285
ஹாங்காங்கின் தன்னாட்சி பறிப்பு

ஹாங்காங்கின் தன்னாட்சி அதிகாரத்தை கட்டுப்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு மசோதாவிற்கு சீன நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு ஹாங்காங் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலை கூட்டி விவாதிக்க அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

70 லட்சம் மக்கள் தொகையை கொண்ட ஹாங்காங் பல ஆண்டுகளாக இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்தது. 1997-ம் ஆண்டு இங்கிலாந்து ஒப்படைத்த பின்னர், ஹாங்காங் சீனாவின் கட்டுப்பாட்டில் தன்னாட்சி பிரதேசமாக இருந்து வருகிறது.வெளியுறவு, ராணுவம் ஆகியவற்றைத் தவிர அனைத்துத் துறைகளையும் ஹாங்காங் அரசே நிர்வகித்து வருகிறது.

ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்கும் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து, கடந்த ஆண்டு போராட்டம் வெடித்தது. நீண்ட நாட்களாக போராட்டம் நீடித்ததால், அந்த சட்டத்திருத்த மசோதாவை கைவிட்டது.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த சீனா, ஹாங்காங் மீதான தனது ஆதிக்கத்தை செலுத்தும் விதமாக புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியில் இறங்கியது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த சீன நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியதும்,தேசிய பாதுகாப்பு சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.ஹாங்காங்கிற்கான புதிய பாதுகாப்புச் சட்டத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. பிரிவினைவாதம், பயங்கரவாதம் மற்றும் வெளிநாடுகளின் தலையீட்டை தடுப்பதே சட்டத்தின் நோக்கம் என விளக்கம் அளிக்கப்பட்டது. ஜனவரி ஒன்றாம் தேதி முதல் புதிய சட்டம் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சீன நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள், இது 1984ம் ஆண்டு சீனா- பிரிட்டன் ஒப்பந்தத்திற்கு எதிரான நடவடிக்கை என விமர்சித்துள்ளன.
ஹாங்காங் மக்களின் உரிமைகளை பறிக்கும் செயல் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டதைக் கண்டித்து ஹாங்காங் மக்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். போலீசார் வன்முறையில் ஈடுபடுவதாகவும், ஜனநாயக ரீதியாக சீர்திருத்தங்களை அமல்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments