போலீசுக்கு சவால் சமூக ஆர்வலருக்கு ‘குருதிபுனல்’ மாவுக்கட்டு..!
அம்பத்தூரில் ஆபாசமாக பேசி போலீசுக்கு சவால் விட்ட சமூக ஆர்வலர் ஒருவர், மதுகடத்திய போது வழுக்கி விழுந்ததால் மாவுகட்டு போடப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை அம்பத்தூரில் தகவல் உரிமை சட்ட சமூக ஆர்வலர் என கூறிக் கொண்டு வலம் வந்தவர் தேவேந்திரன்..! டன்லப் கிரவுண்டு பகுதியில் மதுவிற்பதாக கிடைத்த தகவலின்படி உதவி காவல் ஆய்வாளர் ஒருவர் இவரையும், வாகனத்தையும் சோதனை செய்துள்ளார். அப்போது தேவேந்திரனிடம் மதுபாட்டில் ஏதும் இல்லாததால் அவரை அங்கேயே விட்டுச்சென்றுள்ளார்.
தன்னிடம் சோதனை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆடியோ ஒன்றை வெளியிட்ட தேவேந்திரன், அதில் மதுவிலக்கு காவல்துறையினரை மானபங்கபடுத்தும் விதமாக கேவலமாக பேசியதுடன், தன்னிடம் மன்னிப்பு கேட்க போலீசாருக்கு குறிப்பிட்ட நேரம் கெடுவும் வித்தார்
ஆடியோவை கேட்டு ஆவேசம் அடைந்த போலீசார், தேவேந்திரனை தேடிய போது அவர் ஆவடி அடுத்த படுத்தப்பட்டு மேம்பாலம் அருகே மதுபானம் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.
அம்பத்தூர் மதுவிலக்கு காவல் துறையினரை கண்டதும், தப்பித்துக் கொள்ள தேவேந்திரன் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்ததில் தேவேந்திரனின் வலது கை உடைந்து பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினார். அவரை மனிதாபிமானத்துடன் மீட்ட போலீசார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று மாவுக்கட்டு போட்டுவிட்டனர். பார்ப்பதற்கு குருதிப்புனல் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் நாயகன் போல காட்சி அளித்தார்.
அத்தோடில்லாமல் காவல்துறை அதிகாரிக்கு பகிரங்க மிரட்டல் விட்ட போலி சமூக ஆர்வலர் தேவேந்திரன் மீது வழக்குப் பதிவு செய்த அம்பத்தூர் காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.
கையில் ஒரு ஸ்மார்ட் போன் இருந்தால் போதும், யாரை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் விமர்சித்து அவதூறாக பேசி வாட்ஸ் அப்பில் குரல்பதிவிடலாம்..! என்று சுற்றுத்திரியும் வம்பர்களுக்கு இந்த கைது நடவடிக்கை ஒரு எச்சரிக்கை பாடம் என்கின்றனர் காவல்துறையினர்.
Comments