நாடு தழுவிய ஊரடங்கு ஜூன் ஒன்றாம் தேதி தளர்த்தப்படுமா? அனைத்து முதலமைச்சர்களுடன் அமித் ஷா ஆலோசனை

0 119326
நாடு தழுவிய ஊரடங்கு ஜூன் ஒன்றாம் தேதி தளர்த்தப்படுமா? அனைத்து முதலமைச்சர்களுடன் அமித் ஷா ஆலோசனை

நான்காம் கட்ட ஊரடங்கு நாளை மறுநாளுடன் நிறைவடைய உள்ள நிலையில், தேசிய பொது முடக்கத்தை நீட்டிக்கலாமா அல்லது தளர்த்தலாமா என்பது குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் உள்துறை அமைச்சர் அமீத்ஷாஆலோசனை மேற்கொண்டார்

கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில், கடந்த மார்ச் 25ந் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நான்கு கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும், பொருளாதாரம் சார்ந்த நடவடிக்கைள் மேம்பட வேண்டும் என்பதால் படிப்படியாக தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை முழுமையாக பொது முடக்கம் அமலில் உள்ளது.

நான்காம் கட்ட ஊரடங்கு நாளைமறுநாளுடன் முடிவுக்கு வருகிறது. இதையொட்டி, அனைத்து மாநில முதலமைச்சர்களையும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார். ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக அந்தந்த மாநில அரசுகளின் கருத்துகளை அவர் கேட்டறிந்தார். இதன் அடிப்படையில் ஓரிருநாட்களில் மத்திய அரசு முடிவை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் இடங்களில் கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு, அகமதாபாத், கொல்கத்தா, புனே, தானே, ஜெய்ப்பூர், சூரத், இந்தூர் ஆகிய நகரங்களில் கொரோனாவால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த 11 நகரங்களில் ஊரடங்கு மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

அவ்வாறு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் பல்வேறு தளர்வுகளை அரசு வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், திரையரங்குகள், பொதுக்கூட்டங்கள் போன்றவற்றுக்கான தடை கொரோனா பாதிப்பு முழுமையாக நீங்கும் வரை நீடிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY