வெட்டுக்கிளிகள் தாக்குதலால் ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளில் பேரழிவு ஏற்படும்
வெட்டுக்கிளிகள் தாக்குதலால் ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளில் கோடிக்கணக்கானோர் உணவின்றித் தவிக்கும் நிலை ஏற்படும் என உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்காவில் கென்யா, எத்தியோப்பியா, சோமாலியா உள்ளிட்ட நாடுகளில் கடந்த டிசம்பர் முதல் கோடிக்கணக்கான வெட்டுக்கிளிகள் மரங்கள், பயிர்கள் ஆகியவற்றைத் தின்று அழித்துள்ளன.
ஒரு சதுரக் கிலோமீட்டர் பரப்பில் 8 கோடி வெட்டுக் கிளிகள் இருக்கும் எனக் கருதப்படுகிறது. பெண் வெட்டுக்கிளிகள் ஒரு முறையில் 150 முட்டைகள் வரை இடும்.
2 வாரங்களில் முட்டைகள் குஞ்சு பொரித்து இளம் வெட்டுக்கிளிகளாக வளரும். இதனால் இவற்றின் எண்ணிக்கை 3 மாதங்களில் 20 மடங்கும், 6 மாதங்களில் 400 மடங்கும், 9 மாதங்களில் எட்டாயிரம் மடங்கும் பெருகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
செழிப்பான பயிர்கள் உணவாகக் கிடைத்தால் அடுத்தடுத்த மாதங்களில் இவற்றின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகும்.
இதனால் கிழக்கு ஆப்பிரிக்காவிலும் ஏமனிலும் சேர்த்து 4 கோடி மக்கள் கடும் உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்வார்கள் என உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.
Comments