வடஇந்தியாவில் விளைநிலப் பயிர்களை அழித்து வரும் வெட்டுக்கிளிக் கூட்டம்
வளைகுடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள பாலைவன வெட்டுக்கிளிகள், வடமாநிலங்களில் பயிர்களை நாசம் செய்து வருவதால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
ஆப்பிரிக்காவிலிருந்து கிளம்பி பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் புகுந்த வெட்டுக்கிளிகள் கூட்டம் வயல்களில் பயிர்களை அழிக்கத் தொடங்கியுள்ளன.தற்போது ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 35 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் வெட்டுக்கிளிகள் சூழ்ந்துள்ளதாகக் கூறும் வேளாண்மைத் துறை அதிகாரிகள், கடந்த 26 ஆண்டுகளில் வெட்டுக்கிளிகள் தற்போது மிக மோசமான தாக்குதலை நடத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் மோசமான காலத்தில் தீவிரமான பூச்சித் தாக்குதல் என சுற்றுச்சூழல்த்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மத்திய விவசாய அமைச்சகம் அளித்த தகவலின்படி, ராஜஸ்தானில் 21 மாவட்டங்கள், மத்திய பிரதேசத்தில் 18, குஜராத்தில் இரண்டு மற்றும் பஞ்சாபில் ஒரு மாவட்டம் இது வரை வெட்டுக்கிளிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
விளைநிலங்களை சூழ்ந்திருக்கும் வெட்டுக்கிளிகளை ட்ரோன்கள் மூலம் மருந்து தெளித்தும், தீயணைப்பு மற்றும் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் பூச்சி மருந்து தெளித்தும் அவற்றை அழித்து வருகின்றனர்.
மத்திய பிரதேசத்தின் செஹோர் மாவட்டத்தின் புட்னி மற்றும் நஸ்ருல்லகஞ்ச் பகுதிகளில் உள்ள விவசாயிகள் வெட்டுக்கிளிகளை விரட்டும் முயற்சியில் பாத்திரங்களை அடித்து வருகின்றனர்.பிரயாகராஜில் தங்கள் வாகனங்களில் இருந்து சைரன்களை ஒலிக்குமாறு போலீசார் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் "ஜூன் - ஜூலை மாதங்களில் பருவமழை பெய்யும் முன் வெட்டுக்கிளிகள் முதிர்ச்சியடைந்து இனப்பெருக்கம் செய்யும் என்று தெரிவித்துள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் இயக்குநர் திரிலோச்சன் மொஹாபத்ரா, பலத்த காற்றின் உதவியுடன் மற்ற பகுதிகளுக்கும் இந்தப்பூச்சிகள் பரவுவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் வெட்டுக்கிளிகளால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய்ந்து அதற்கேற்ப இழப்பீடு வழங்கவேண்டும் என வடமாநில விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Comments