தத்தித்தாவும் வெட்டுக்கிளி தமிழகத்திற்கு வருமா..?
வெட்டுக்கிளிகள் தமிழகத்திற்கு படையெடுத்து வருவதற்கான வாய்ப்பு குறைவு என்று கூறியுள்ள வேளாண்துறை, கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது
பாலைவன வெட்டுக்கிளிகள் வழக்கமாக ராஜஸ்தான் எல்லையோடு முடிவடைந்திருந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள படையெடுப்பு 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் பெரும் நிலப்பரப்பை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளதால் அச்சம் நிலவுகிறது.
ஆனால், தமிழ்நாட்டிற்கு வெட்டுக்கிளி படையெடுப்பு வருவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு என தெரிவித்துள்ள வேளாண் துறை, ஒருவேளை அவ்வாறு ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் காணப்படும் வெட்டுக்கிளி படையெடுப்பு இதுவரை தக்காண பீடபூமியை தாண்டி வந்ததில்லை என்பதால், தமிழகத்திற்கு வருவதற்கான வாய்ப்பு குறைவு என கூறப்பட்டுள்ளது.
ஒருவேளை அவ்வாறு ஏற்பட்டால் வேம்புசார்ந்த பூச்சிக்கொல்லி மருந்துகள், மெட்டாரைசியம் அனிசோபிலே எனும் எதிர் உயிர் பூஞ்சாணம் ஆகியவற்றை தெளித்து கட்டுப்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாலத்தியான் மருந்தினை தெளிப்பான்கள், பெரிய டிராக்டர்கள், தீயணைப்பு வாகனங்கள் மூலம் பரந்த அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம் என்றும், வெட்டுக்கிளிகளை சாப்பிடும் கோழி, பறவைகள் மூலமும், அரசு அனுமதியுடன் பூச்சி மருந்தினை ஒட்டு மொத்த வான்வெளியில் தெளிப்பதன் மூலமும் கட்டுப்படுத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது
Comments