பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டில் தொடர்புடைய 196 தேர்வர்களுக்கு,வாழ்நாள் தடை விதித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவு
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டில் தொடர்புடைய 196 தேர்வர்களுக்கு, வாழ்நாள் தடை விதித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு 1,058 பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் 196 பேர் தலா 25 லட்சம் ரூபாய் கையூட்டாக கொடுத்து அதிக மதிப்பெண் பெற்றது நிரூபிக்கப்பட்டதையடுத்து 56 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிய விண்ணப்பப் பதிவு ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பல முக்கிய புள்ளிகள், தொடர்புடையவர்களுக்கு பணத்தை திருப்பித் தராமல் இந்த முறை வேலை நிச்சயம் என உறுதி அளித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில் முறைகேட்டில் ஈடுபட்ட சிலர் மீண்டும் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
குரூப் 4, குரூப் 2ஏ தேர்வு முறைகேடுகளில் சிக்கிய இடைத்தரகர்கள் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டிலும் தொடர்புடையவர்கள் என சி.பி.சி.ஐ.டி. தெரிவித்துள்ள நிலையில் முறைகேட்டில் ஈடுபட்ட 196 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Comments